woman becomes mother to children  lost their mother Wayanad landslide

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி இரவு கடும் மழை பெய்த நிலையில், 30 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் முண்டக்கை என்ற மலைக்கிராமத்தில் திடீரென நிலச்சரிவும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியதால் மூன்று கிராமத்தில் வசித்த மக்கள், வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது.

Advertisment

மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், மண்ணுக்குள் புதைந்தும் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலரின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை. பேரிடர் மீட்புக் குழு, காவல்துறை , இந்திய ராணுவம் என அனைத்து துறைகளும் ஒன்றாக சேர்ந்து மீட்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன. நிமிடத்திற்கு நிமிடம் உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்; பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்; குடும்ப உறுப்பினர்களைப் பிரிந்து தவிக்கும் உறவுகள் என கேரள மாநிலம் எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. சில இடங்களில் குழந்தைகளின் பெற்றோர்கள் உயிரிழ்ந்த நிலையில், குழந்தைகளை மீட்டு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையானவை செய்துகொடுக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்குப் பாவனா என்பவர் தாய்ப்பால் கொடுத்து வருகிறார். கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர்கள் சஜின் - பாவனா தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 4 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில்தான் நிலச்சரிவில் தாயை இழந்த குழந்தைகள் தாய்ப்பால் இல்லாமல் கஷ்டப்படுவார்கள் என்று எண்ணிய பாவனா, தானே அந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க முன்வந்தார். இதனைத் தனது கணவர் சஜினிடம் கூற, அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து இது தொடர்பாக ஒரு அறிவிப்பினை சஜின் சமூக வலைதளபக்கத்தில் வெளியிட, அடுத்த நிமிடமே அவர்களது செல்போனுக்கு வயநாடு முகாம்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது. உடனே சஜின், பாவனா மற்றும் குழந்தைகள் ஜீப்பின் மூலம் சம்பந்தப்பட்ட முகாம்களுக்குச் சென்றனர். பின் பாவனா 6 மாத குழந்தைக்கும், 3 வயதுக் குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுத்தார்.

Advertisment

“குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து, நன்கு பராமரித்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் வரை நாங்களும் இந்த முகாமில் தான் இருப்போம்” என்றுபாவனா தெரிவித்திருக்கிறார். இக்கட்டான சூழலில் தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்துக் காப்பாற்றும் மனிதநேயமிக்க இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.