Skip to main content

10 சதவீத இடஒதுக்கீடு: 8 லட்ச ரூபாய் உச்சவரம்பை மறுபரிசீலனை - மத்திய அரசு தகவல்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

supreme court

 

நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில், பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவதில் வருமான உச்சவரம்பாக 8 லட்சத்தை நிர்ணயித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினரின் குடும்ப வருமானம் 8 லட்சமாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருந்தால் 10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர முடியாது. அதேபோல் ஓபிசி பிரிவினருக்கு அகில இந்திய மருத்துவ படிப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

 

இவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது அவ்வப்போது விசாரிக்கப்பட்டுவருகிறது. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள், "எதை அடிப்படையாக வைத்து பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 8 லட்ச ரூபாய் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டது" என கேள்வியெழுப்பினர்.

 

மேலும், ஓபிசி இடஒதுக்கீட்டிற்கான கிரீமிலேயர் வரம்பு 8 லட்ச ரூபாயாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு சமூக மற்றும் கல்வி பின்னடைவுகள் இல்லாதபோது, அவர்களுக்கும், அப்பின்னடைவுகளைக் கொண்ட ஓபிசி பிரிவினருக்கும் ஒரே வரம்பு நிர்ணயிக்கப்பட்டது எப்படி எனவும் கேள்வியெழுப்பினர். தொடர்ந்து இரு பிரிவினருக்கும் 8 லட்சம் என்ற ஒரே வரம்பு நிர்ணயிக்கப்பட்டதன் மூலம், சமமற்றவர்களை சமமாக ஆக்குகிறீர்கள் என தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

 

இந்தநிலையில், நேற்று (25.11.2021) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 8 லட்ச ரூபாய் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டது குறித்து மறுபரிசீலனை செய்வதாகவும், அதற்காக நான்கு வாரங்கள் அவகாசம் வேண்டுமென மத்திய அரசு கோரியது.

 

இதனையடுத்து உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு நான்கு வார அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.