நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி (23.07.2024) தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.
அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது இந்த பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், பாஜக ஆட்சியமைக்கக் காரணமாக இருக்கும், சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் திருப்திப்படுத்தவே, பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து இன்று (02.08.2024) கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு செங்கல்லைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை. இந்த மருத்துவமனை 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது” எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான தாமதத்தை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் மிக விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.
தொழில்நுட்ப காரணங்களால்தான் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தாமதம் ஆகிறது” விளக்கமளித்தார். மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.