Skip to main content

அதிதீவிர புயலாக மாறும் யாஸ்; கரையைக் கடப்பது எப்போது? - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

indian  meteorological   department

 

அரபிக் கடலில் உருவான டவ்தே புயலைத்தொடர்ந்து, தற்போது வங்கக்கடலில் யாஸ் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலினால் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழைபெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி மழையும் பெய்து வருகிறது. இந்த புயலைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

இந்த புயல் ஒடிசா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கிடையே கரையைக் கடக்கவுள்ளதால், அம்மாநிலங்களிலும் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.  இந்நிலையில், யாஸ் புயல் தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் அதிதீவிர புயலாக மாறும் என்றும், நாளை அதிகாலை தம்ரா துறைமுகத்திற்கு அருகே வடமேற்கு வங்கக்கடலை அடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்பிறகு இந்த அதிதீவிர புயல், நாளை மதியம் வடக்கு ஒடிசா கடற்கரைக்கும் - மேற்குவங்க கடற்கரைக்கும் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காங்கிரசிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக்காது” - மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Mamata Banerjee speech on Congress won't get a single vote in west bengal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. வரும் 26ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 

அதன்படி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று (24-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்கத்தில் 26,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களிடமிருந்து அல்ல, எந்த அரசாங்க ஊழியரிடமிருந்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என இன்னும் நான் நம்புகிறேன்.

பாஜக உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். சி.பி.ஐயை விலைக்கு வாங்கியுள்ளனர். என்.ஐ.ஏ.வை வாங்கியுள்ளனர். பி.எஸ்.எப்-ஐ விலைக்கு வாங்கியுள்ளனர்.  தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில், பாஜக மற்றும் மோடியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதைப் பார்க்காதீர்கள். புறக்கணிக்க வேண்டும்” என்று கூறினார். 

Next Story

‘அக்பர் - சீதா’ சர்ச்சை; சிங்கங்களுக்கு சூட்டப்பட்ட புதிய பெயர்கள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
New names given to lions on 'Akbar - Sita' Controversy

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பூங்காவிற்கு, கடந்த 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ என்றும் முன்னரே பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘முகலாய மன்னரின் பெயரான அக்பர் என்ற பெயரையும் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சிங்கங்களுக்கு வைத்து ஒரே இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்து மத வழக்கங்களில் சீதா தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவைத் தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். இதனால் அந்தச் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா அமர்வில் கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை சீதா மட்டுமல்ல நானும் ஆதரிக்கவில்லை. இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள். எனவே இது போன்ற பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம். எனவே, சர்ச்சைகளைத் தவிர்க்க இரண்டு சிங்கங்களுக்கும் வேறு பெயர்களை வைக்க வேண்டும்” என்று கூறி மாநில அரசிற்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கப்பட்டதற்காக, அம்மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை திரிபுரா அரசு இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டது.

இந்த நிலையில், அக்பர் - சீதா பெயரால் சர்ச்சையில் சிங்களுக்கு புதிய பெயரை வைக்க மேற்கு வங்க அரசு பரிந்துரை செய்துள்ளது. அதில், அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கு ‘சூரஜ்’ என்ற பெயரும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு ‘தயா’ என்றும் புதிய பெயர்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் மேற்கு வங்க அரசு பரிந்துரைத்துள்ளது.