Skip to main content

மத்திய அரசின் விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது வாட்ஸ்அப்!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

whatsapp

 

சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி ஒருசாரார் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததுவந்தனர். அதேபோல் ஓடிடி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்துவந்தது. மேலும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சமூகவலைதளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் கட்டுப்பாடுகளை அறிவித்தது.

 

மேலும், இந்தக் கட்டுப்பாடுகள் மூன்று மாதங்கள் கழித்து அமலுக்கு வருமென்றும் மத்திய அரசு அப்போது தெரிவித்திருந்தது. இந்தநிலையில், புதிய கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் (25.05.2021) முடிவடைந்தது. ஆனால் தற்போதுவரை வாட்சப், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் புதிய கட்டுப்பாடுகளுக்கு இணங்கவில்லை. மேலும், அந்த நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிகள் குறித்து, அமெரிக்காவில் இருக்கும் தங்களது தலைமை அலுவலகத்தின் பதிலுக்காக காத்திருப்பதால், புதிய விதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக முடிவெடுக்க 6 மாதங்கள்வரை  அவகாசம் கேட்டுவருகின்றனர்.

 

ஃபேஸ்புக் நிறுவனமும் தாங்கள் புதிய விதிகளுக்கு உடன்பட குறிக்கோள் கொண்டிருப்பாதகவும், அதேநேரத்தில் சில விவகாரங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச வேண்டியிருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் வாட்ஸ்அப் நிறுவனம், மத்திய அரசின் புதிய விதிமுறைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மத்திய அரசின் புதிய விதிகளில் ஒன்று, ஒரு தகவலை முதன்முதலில் குறிப்பிட்ட சமூகவலைத்தளத்தில் பதிவிட்டவர் யார் என அரசு கேட்டால் சமூகவலைதளம், அந்த நபரைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என்பதாகும். இதனை எதிர்த்தே வாட்ஸ்அப் நிறுவனம், வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விதிமுறை இந்திய அரசியல் சட்டம், தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள தனியுரிமையை மீறும் வகையில் இருப்பதாகவும், வாட்ஸ்அப் செயலியில் தகவல் அனுப்பும் முறை என்க்ரிப்ட் செய்யப்பட்டிருப்பதால், முதன்முதலில் ஒரு செய்தியைப் பதிவிட்டவரைக் கண்டுபிடிக்க, தகவலைப் பெற்றவர் முதல் அனுப்பியவர் வரை அனைவரது என்கிரிப்ஷனும் உடைக்கப்பட வேண்டியதிருக்கும் எனவும் வாட்ஸ்அப் தனது மனுவில் கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க வாட்ஸ்அப் செய்தித்தொடர்பாளர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்