Skip to main content

மேற்கு வங்க ரயில் விபத்து; பலி எண்ணிக்கை உயர்வு!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
west bengal kanchenjunga express incident Railway sets up a control desk

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் இன்று (17.06.2024) காலை 9 மணியளவில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த ரயில் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் முழுவதுமாக சீர்குலைந்துள்ளன. அதிலும் குறிப்பாக எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் முழு வீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி குமார் வைஷ்ணவ் தனது, எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “வடகிழக்கு எல்லையோர ரயில்வே மண்டலத்தில் எதிர்பாராத ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் (SDRF) ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். 

west bengal kanchenjunga express incident Railway sets up a control desk

இந்த ரயில் விபத்து தொடர்பாக சீல்டா கிழக்கு ரயில்வே ரங்கபாணி நிலையத்தில் ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து சம்பவம் குறித்து டார்ஜிலிங் காவல்துறையின் கூடுதல் போலீஸ் எஸ்.பி. அபிஷேக் ராய் கூறுகையில், “இந்த விபத்தில் ஐந்து பயணிகள் இறந்துள்ளனர். 20 முதல் 25 பேர் காயமடைந்துள்ளனர். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4 லிருந்து 5 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில், “ரயில் மோதியபோது நான் பி1 கோச்சில் பயணித்தேன். நான் விபத்தில் இருந்து மீட்கப்பட்டேன். என் தலையில் காயம் ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“போலீசாரால் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது” - மேற்குவங்க ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
West Bengal Governor's sensational allegation on police

மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸுக்கும் இடையே சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஏற்கெனவே, ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பெண் ஒருவர், ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸ் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையில், தேர்தல் நேரத்தில் கொல்கத்தாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.கவின் சின்னமான தாமரை சின்னத்தை ஆடையில் அணிந்து அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இப்படிபட்ட பரபரப்பான மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினார். இருப்பினும், மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், தான் பாதுகாப்பாக இல்லை என ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக நேற்று (20-06-24) கொல்கத்தாவில் ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தற்போதைய பொறுப்பதிகாரி மற்றும் அவரது குழுவினர்களால்  எனது தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக நான் நம்புகிறேன். ராஜ்பவனில் கொல்கத்தா காவல்துறையினரிடம் நான் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜியிடம் தெரிவித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இங்கு பணியமர்த்தப்பட்டுள்ள காவலர்கள் எனது நடமாட்டத்தையும், எனது அதிகாரிகள் பலரையும் கண்காணித்து வருகின்றனர். அவர்களின் செயல்கள் அரசாங்கத்தில் உள்ள அவர்களின் அரசியல் எஜமானர்களின் மறைமுக ஆதரவுடன் உள்ளன. இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும்” என்று கூறினார். 

Next Story

25 கி.மீ வரை வாலிபரின் உடலை இழுத்து வந்த ரயில்; காட்பாடியில் பரபரப்பு சம்பவம்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
train dragged the boy body for 25 km

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா வரை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம்(17.6.2024) நள்ளிரவு சுமார் 11:45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்பொழுது ரயில் இஞ்சின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் வாலிபரின் பிணம் ஒன்று சிக்கி இருந்தது. இதனைக் கண்டு பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதனைக் கண்டு கீழே இறங்கிய இஞ்சின் டிரைவர் இரயிலில் வாலிபர் பிணம் சிக்கி இருந்ததைக் கண்டுபிடித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி இரயில்வே இருப்பு பாதை போலீசார் இரயில் இஞ்சினில் சிக்கி இருந்த வாலிபர் பிணத்தை மீட்டனர். அப்பொழுது வாலிபர் உடலில் இரண்டு கால்களும்  துண்டாகி இருந்தது மேலும் இரயிலில் சிக்கி இழுத்து வந்ததால் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்களும் தலையில் பலத்த காயம் பட்டிருந்தது.

இறந்த வாலிபர் சிவப்பு நிற டி-ஷர்ட், நீல நிற  பேண்ட் அணிந்திருந்தார். இறந்த வாலிபர் யார் என்பது தெரியவில்லை மேலும் எந்த இடத்தில் சிக்கினார் என்பதும் தெரியவில்லை. போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். கால்கள் இல்லாத நிலையில் மீட்கப்பட்டதால், காட்பாடி இரயில்வே போலீசார் தண்டவாள பகுதியில் வாலிபரின் கால்களை தேடிச் சென்றனர் .

ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்த போது இஞ்சின் முன் பக்கத்தில் வாலிபரின் பிணம் இல்லை அதற்கு பிறகு வாலாஜா முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையில் தான் இஞ்சினில் வாலிபர் சிக்கி இருந்துள்ளார். சுமார் 25 கிலோமீட்டர் அங்கிருந்த வாலிபரின் பிணம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு இழுத்து வந்துள்ளது தெரியவந்தது. இறந்த வாலிபர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என காட்பாடி இரயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .சுமார் 25 கிலோமீட்டர் இஞ்சினில் வாலிபர் உடல் இழுத்து வந்த சம்பவம்  காட்பாடி இரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.