Skip to main content

"கோழைத்தனமானது... இந்திய பிரதமர் இப்படி நடந்து கொள்ளக்கூடாது" - இறந்த விவசாயிகளின் தரவுகளை காட்டி ராகுல் விமர்சனம்!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

rahul gandhi

 

வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராடி வந்த நிலையில், தற்போது வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.

 

இந்தநிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிரதமரின் தவறால் 700 பேர் உயிரிழந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளதோடு, இறந்த விவசாயிகளை பற்றி தரவுகள் இல்லை என கூறியதை விமர்சித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இறந்த விவசாயிகள் தொடர்பான பட்டியலை வெளியிட்ட ராகுல் காந்தி இதுதொடர்பாக கூறியுள்ளதாவது;

 

விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க அரசிடம் திட்டமுள்ளதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேளாண்  அமைச்சகத்திடம் இந்த விவகாரத்தில் எந்தப் பதிவும் இல்லை, எனவே அதுகுறித்து கேள்வி எழவில்லை என்று அமைச்சகம் பதிலளிக்கிறது. உண்மை என்னவென்றால் அவர்களிடம் விவரங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை.

 

நாங்கள் அவர்களுக்காக பணி செய்துள்ளோம் என அரசாங்கத்திடம் கூற விரும்புகிறோம். எங்களிடம், எங்களால் (பஞ்சாப் அரசு) 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்ட 403 விவசாயிகளின் பட்டியல் உள்ளது. 152 பேருக்கு வேலை அளித்துள்ளோம். மற்றவர்களுக்கும் வேலை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களை சேர்ந்த (போராட்டத்தில் இறந்த) 100  விவசாயிககளின் பட்டியலும் எங்களிடம் உள்ளது. மற்ற விவசாயிகளின் பெயர்கள் பொதுத்தளத்தில் உள்ளது. அதை எளிதாக சரிபார்க்க முடியும். இந்த பட்டியல்கள் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

 

அரசாங்கம் தன்னிடம் ஒரு பட்டியல் இல்லை என்று கூறுகிறது. இதோ எங்களிடம் (இறந்த விவசாயிகளின்) பெயர்கள், எண்கள், முகவரிகள் உள்ளன.  அரசாங்கத்திடம் இது ஏற்கனவே உள்ளது என்பதுதான் உண்மை. ஆனாலும் என்ன பிரச்சனை? பிரதமர் தான் தவறு செய்துவிட்டதாக கூறி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்தத் தவறினால் 700 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது நீங்கள் அவர்களின் பெயர்களைப் பற்றி பொய் சொல்கிறீர்கள். அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் என்ன பிரச்சனை?. பிரதமர் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் கோழைத்தனமானது. இந்திய பிரதமர் இப்படி நடந்து கொள்ளக்கூடாது.

 

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடிஜியிடம் தனது தொழிலதிபர் நண்பர்களின் எண்கள் மட்டுமே உள்ளது. தியாகிகளான விவசாயிகளின் பெயர்கள் மற்றும் எண்கள் எங்களிடம் உள்ளன. நீங்கள் உண்மையிலேயே மன்னிப்பு கேட்க விரும்பினால், இந்த குடும்பங்களை அழைத்து, அவர்களின் துயரத்தைக் கேட்டு, இழப்பீடு வழங்குங்கள். பஞ்சாபின் காங்கிரஸ் அரசு எந்த தவறுமின்றி மனிதாபிமானத்திற்காக இதைச் செய்தது" என கூறியுள்ளார்.

 

  
 

சார்ந்த செய்திகள்

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.

Next Story

பா.ஜ.க வேட்பாளர் வெற்றி; “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் வந்துவிட்டது” - ராகுல் காந்தி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உள்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வந்துவிட்டது. பாபா சாகேப் அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதற்காக, மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிப்பது மற்றொரு படியாகும். மீண்டும் சொல்கிறேன், இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் அல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் தேர்தல்” என்று பதிவிட்டுள்ளார்.