Skip to main content

உ.பி-யில் வெல்கிறோம்; ஜம்மு காஷ்மீரில் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது - அமித் ஷா!

 

amit shah

 

மத்திய அமைச்சர் அமித் ஷா, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தனியார் ஊடகம் ஒன்று நடத்திய தலைமைத்துவ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பஞ்சாப் தேர்தல் கூட்டணி, உத்தரப்பிரதேச தேர்தல், ஜம்மு காஷ்மீர் விவகாரம் என பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

 

பஞ்சாப் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிய அமித் ஷா, "நாங்கள் கேப்டன் (அமரீந்தர் சிங்)  மற்றும் திண்ட்சா சாப் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாங்கள் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை பொறுத்த வரையில், பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்கள் உங்களுக்கு பயனளிக்காது என்று நீங்கள் நினைத்தால், அவற்றை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என கூறி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பெருந்தன்மை காட்டியுள்ளார். பஞ்சாபில் வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நினைக்கிறேன்" என கூறினார்.

 

தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய அமித் ஷா, "“முதலில் ஜம்மு காஷ்மீரில் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட்டு அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் ரீதியான கோரிக்கை உள்ளது. அந்த பிராந்தியத்தில் எல்லை நிர்ணயம் வரையறை செய்வதற்கான சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. எனவே, முதலில் எல்லை வரையறை நடக்கும். பின்னர் தேர்தல் நடக்கும். அதன்பின்னர் மாநில அந்தஸ்தை திரும்ப வழங்கும் செயல்முறை தொடங்கும். இதை நான் பலமுறை கூறியும் அரசியல் சர்ச்சையை மட்டுமே உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர்" என தெரிவித்தார்.

 

மேலும் அவர், "துணை நிலை ஆளுநர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சூழல் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். மக்கள் நலத் திட்டங்களைப் பொறுத்தவரை, முதல் ஐந்து பிராந்தியங்களில் காஷ்மீரும் உள்ளது. காஷ்மீர் மக்கள் இந்த மாற்றத்தை வரவேற்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சட்டப்பிரிவு 370 திரும்பப் அளிக்கப்படும்போதுதான் காஷ்மீர் அமைதியைக் காணும் என்று (பரூக்) அப்துல்லா கூறியதை நான் சமீபத்தில் பார்த்தேன். சட்டப்பிரிவு 370, 75 ஆண்டுகளாக இருந்தது, ஏன் அமைதி இல்லை? சட்டப்பிரிவு 370க்கும் அமைதிக்கும் இடையே தொடர்பு இருந்தால், 1990களில் ஏன் அமைதி இல்லை. (சட்டம் மற்றும் ஒழுங்கை) மதிப்பிடுவதற்கு எந்த பரிமாணத்தையும் பயன்படுத்திகொள்ளுங்கள். முன்பு இருந்த சூழ்நிலையில் 10 சதவீதத்தை கூட தொட மாட்டோம். அதற்கு அர்த்தம் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்பதுதான்" என கூறியுள்ளார்.

 

இதனைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச தேர்தலை பற்றி பேசிய அமித் ஷா, "கூட்டணி அடிப்படையில் வாக்குகளை மதிப்பிடுவது சரியல்ல. அரசியல் என்பது இயற்பியல் அல்ல, வேதியியல். இரண்டு கட்சிகள் ஒன்று சேரும் போது, அவர்களின் வாக்குகளும் கூடும் என்பது எனக்கு உடன்பாடில்லாத மதிப்பீடு. இரண்டு இரசாயனங்கள் கலக்கும் போது வேறு சில இரசாயனங்கள் உருவாகின்றன. கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம். சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸும் ஒன்று சேர்ந்தன. பின்னர் மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்தன. இரண்டு முறையும் பாஜக வெற்றி பெற்றது. வாக்கு வங்கி கணக்கை அடிப்படையாக கொண்ட கூட்டணிகளால் மக்கள் வழிநடத்தப்படுவதில்லை. நாங்கள் பெரும்பான்மையுடன் உ.பி.யில் வெற்றி பெறுகிறோம்" என சூளுரைத்தார்.

 

கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, "தேவையற்ற சர்ச்சைக்கு வழிவகுக்கும் என்பதால், தடுப்பூசியை அரசாங்கம் கட்டாயமாக்காது" என்றார். தொடர்ந்து கரோனா குறித்து பேசிய அவர், "மணி அடிப்பதையும், கைதட்டுவதையும், முகக்கவசம்  அணிவதையும் கேலி செய்தவர்கள் இன்று அமைதியாக உள்ளார்கள். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கரோனாவுடன் போராடின. இந்தியாவில் 130 கோடி மக்களைப் போரில் நரேந்திர மோடி ஒன்றிணைத்தார். நம் மக்களிடையே ஒழுக்கத்தை விதைத்தார். இதனால் நாம் இந்த போரில் வெற்றிபெற்றோம். லால் பகதூர் சாஸ்திரிக்குப் பிறகு, நரேந்திர மோடியின் வார்த்தைகளுக்கு நாடு அளித்த மரியாதையை வேறு எந்த தலைவருக்கும் அளித்து நான் பார்த்ததில்லை" என கூறியுள்ளார்.