கம்யூனிஸ்ட்களின் கோட்டையாகக் கருதப்பட்ட திரிபுராவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவுக்கு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியைக் கைப்பற்ற மார்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
இந்த நிலையில், திரிபுரா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 28 லட்சத்து 13 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள நிலையில் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கும் இந்த மாத இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளதால், திரிபுராவில் இன்று பதிவாகும் வாக்குகள் மொத்தமாக சேர்த்து அடுத்த மாதம் 2 ஆம் தேதி மூன்று மாநில வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கபடவுள்ளது.