The verse spoken by Shah Rukh Khan, Arvind Kejriwal to score

இயக்குநர்அட்லீ இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான்நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை அடைந்து சாதனை படைத்து வருகிறது. அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் குழந்தைகள் உயிரிழப்பது, பெரும் பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் கடன்கள் தள்ளுபடி செய்வது எனப் பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்கியிருப்பார் இயக்குநர் அட்லீ.

Advertisment

குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், மக்களைப் பார்த்து மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் வாக்குகளை அளிக்க வேண்டாம் என்று படத்தின் நாயகன் ஷாருக்கான் கூறிருப்பார். இந்த வசனத்தை மேற்கோள் காட்டி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றைத்திறந்து வைத்தார். அவருடன் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொண்டார்.

Advertisment

அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “ஜவான் திரைப்படத்தை அனைவரும் பார்த்து இருப்பீர்கள். அதில் ஷாருக்கான், ஜாதி மற்றும் மதம் அடிப்படையில் வாக்குகளை அளிக்க வேண்டாம். அதற்கு பதிலாக நல்ல கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை வேட்பாளர்களால் வழங்க முடியுமா என்பதைப் பார்த்து வாக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருப்பார். அதை செய்யும் ஒரே கட்சி ஆம் ஆத்மி கட்சி தான். உங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தருகிறோம் என்ற வாக்குறுதியின் பேரில் தான் நாங்கள் வாக்கு கேட்கிறோம்”என்று கூறினார்.