Skip to main content

''அந்த வீணை தற்போது வரை அருங்காட்சியகத்தில் இருக்கிறது...'' - காசி தமிழ்ச் சங்கமம் மேடையில் சுவாரசியம் பகிர்ந்த இளையராஜா

 

nn

 

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இன்று (19/11/2022) மதியம் நடந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, ''இங்கு வந்திருக்கக்கூடிய அனைவருக்கும் மகிழ்ச்சியான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். காசி நகருக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை இங்கு விளக்கி விளக்கி அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். பாரதியார் இங்கே இரண்டு வருடம் படித்திருக்கிறார். இங்குப் படித்து அவர் கற்றுக்கொண்ட விஷயங்களையும்,  புலவர் பெருமக்கள் உரையாடியதை, அவர்கள் பங்கு கொண்ட விவாதத்தை எல்லாம் நேரிலேயே பார்த்து, 'காசி நகர் புலவர் இங்கே செய்யும் பேச்சுக்களைக் காசியில் கேட்க ஒரு கருவி செய்வோம்' என்று இந்தியாவில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாத நேரத்திலேயே இந்தப் பாடலை அவர் பாடி இருக்கிறார்.

 

nnn

 

'கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்' என்றும் 'வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்' என்றும் நதிகள் இணைப்பு திட்டம் வருவதற்கு முன்பே அவர் 22 வயதில் இந்தப் பாடலைப் பாடி விட்டுப் போய்விட்டார். அப்படிப்பட்ட பாரதியார் தனது ஒன்பதாவது வயது முதல் 11 வயது வரை இரண்டு ஆண்டுகள் இங்கே இருந்து பயின்று அறிவு பெற்றிருக்கிறார் என்பது தமிழ் பெருமக்களுக்கு மிகவும் அரிய விஷயம். அதேபோல் நீங்கள் அறியாத விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கபீர் தோகா பாடினார். இரண்டு அடிகளில் பாடுவது. அங்கே திருவள்ளுவர் தமிழில் திருக்குறள் என்ற நூலை இயற்றினார் இரண்டு அடிகளில். தோகாவில் 8 சீர்கள் அமைந்திருக்கின்றன. திருக்குறளில் ஏழு சீர்கள் அமைந்திருக்கிறது. முதல் அடி 4 இரண்டாம் அடி மூன்று சீர். இதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

 

கர்நாடக சங்கீதத்தின் மாமேதைகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் இங்கே வந்து நிறைந்து பல பல இடங்களில் பாடி சென்றவர். கங்கை நதியில் மூழ்கி எழும் பொழுது சரஸ்வதி தேவி அவருக்கு வீணையைப் பரிசளித்திருக்கிறார். அந்த வீணை தற்போது வரை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். அப்படிப்பட்ட பெருமையை மிகுந்த காசி நகரில் தமிழ்ச் சங்கமத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி நமது பிரதமருக்குத் தோன்றியது என்று நாம் வியந்து வியந்து வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !