கேரளாவை ஆட்சி செய்யும் இடது முன்னணி அரசு பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், குழந்தைகள் பள்ளிகளில் சேர வேண்டுமெனில் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை, பள்ளி நிர்வாகத்திடம் காண்பிக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா நேற்று வெளியிட்டார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கேரள மாநிலத்தில் நூறு சதவீதம் நோய்த்தடுப்பு மற்றும் சுகாதாரமான வாழ்க்கைமுறையை உருவாக்க இந்த முடிவை அரசு எடுத்துள்ளது என தெரிவித்திருந்தார்.
பலரிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த அறிவிப்பிற்கு, சில அமைப்புகள் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன. தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையின்மையை முன்னிறுத்தி இந்த அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன.
‘சுகாதார நடவடிக்கைகளில் கேரளா மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது. இதனைக் கெடுக்க நினைக்கும் எந்தப் போராட்டமும் ஏற்கத்தக்கதல்ல. தவறான கருத்துகளைப் பரப்பி போராட்டம் நடத்துபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் சைலஜா தெரிவித்துள்ளார்.
முன்னதாக மூத்த மருத்துவர்கள் 17 பேர் கொண்ட குழு அமைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இந்தக் குழு திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கவும் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.