/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfhdt.jpg)
65 வயது முதியவர் ஒருவரைச் சிறுநீரைக் குடிக்கக்கூறி ஒருவர் மிரட்டிய சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லலித்பூரில் உள்ள ரோடா கிராமத்தைச் சேர்ந்த அமர் என்ற முதியவரின் மகனை சோனு யாதவ் என்ற நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோடரியால் தாக்கியுள்ளார். இதுதொடர்பாக அமர் மற்றும் அவரது மகன் லலித்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், புகாரை திரும்பப்பெறக்கோரி சோனு யாதவ், அமர் மற்றும் அவரது மகனை மிரட்டியுள்ளார். அப்போது, தனது சிறுநீரைக் குடிக்கும்படி முதியவர் அமரை மிரட்டியுள்ளார் சோனு யாதவ்.
இதுகுறித்து கண்ணீருடன் பேசியுள்ள முதியவர், "சோனு யாதவ் என்ற நபர் ஒரு கோப்பையில் நிரப்பப்பட்ட அவரது சிறுநீரைக் குடிக்க என்னைக் கட்டாயப்படுத்தினார். நான் மறுத்தபோது, அவர் என்னைத் தாக்கினார். அவர் சில நாட்களுக்கு முன்பு என் மகனைக் கோடரியால் தாக்கியிருந்தார், நாங்கள் அவருக்கு எதிராகப் காவல்துறையில் புகார் செய்தோம். எனவே அவர் எங்களை புகாரை திரும்பப்பெறும்படி கட்டாயப்படுத்தினார்" எனத் தெரிவித்துள்ளார். இந்தச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சோனு யாதவ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச்சம்பவம் குறித்துப் பேசியுள்ள லலித்பூர் எஸ்.பி மிர்சா மன்சார் பேக், "ரோடா கிராமத்தில் செல்வாக்கு மிக்க இருவர், இரண்டு பேரைத் தாக்கியுள்ளனர். தகவல் கிடைத்தவுடன் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். பிரதான குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்காகத் தேடல் நடைபெற்று வருகிறது. எந்தவிதமான கொடுமைப்படுத்துதலையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சாதிய ரீதியான ஒடுக்குதல்கள் அதிகரித்துவரும் சூழலில், அதேபோன்றதொரு சம்பவம் தற்போது மீண்டும் நடந்திருப்பது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலான பல்வேறு கேள்விகளை அம்மாநில அரசு மீது எழுப்பியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)