உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி என 3 ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஜனவரி 13ஆம் தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி 26ஆம் தேதி வரை என 45 நாட்கள் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் இங்குப் புனித நீராட நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிராயாக்ராஜிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு அருகே பக்தர்கள் கூடியிருக்கும் இடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்து அங்குத் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்து தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கும்பமேளாவிற்காக அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சுமார் 70 - 80 குடிசைகள் மற்றும் 8 - 10 கூடாரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டு, மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.
இது குறித்து முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் நடந்த தீ விபத்து குறித்துக் கேட்டறிந்தார். தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.