United Janata Dal Announcement on Who has the position of Speaker?

ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தல் பரப்புரையில், அதிக பெரும்பான்மையாக 400 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என பா.ஜ.க தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பெரும் ஏமாற்றத்தைப் பெற்றுத் தந்தது.

Advertisment

543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்.

Advertisment

இதற்கிடையில், பா.ஜ.கவுக்கு ஆதரவளித்த தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளதாகத்தகவல் வெளியானது. அதில், மூன்றுக்கும் மேற்பட்ட கேபினட் அமைச்சர்கள் பதவியைத் தெலுங்கு தேசம் கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் சபாநாயகர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியானது. அதே போல், ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும் என்றும், சபாநாயகர் பதவி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதா தளம் எதிர்பார்ப்பதாகத்தகவல் வெளியானது.

இதனிடையே, மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜூன் 24ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் மக்களவைக் கூட்டத்தொடர் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதேபோல், மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

Advertisment

இந்த நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. இது குறித்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் கே.சி.தியாகி கூறுகையில், “ஐக்கிய ஜனதா தளம் கட்சி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வலுவாக உள்ளன. சபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க பரிந்துரைக்கும் வேட்பாளரை நாங்கள் ஆதரிப்போம்” என்று கூறினார்.