Skip to main content

“ஒரு வாரத்தில் நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்” - மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Union Minister's says CAA will be enforced across the country in a week

2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு, புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

மேலும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. சிஏஏ எனப்படும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. அதன் பிறகு, கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இதற்காக விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் மீண்டும் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கம் மாநிலம், காக்த்வீப் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒன்றிய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டு இருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திடீரென அமல்படுத்துவது நாட்டில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கலாம்.

சிஏஏ சட்டம் மதம், சமூகம், கொள்கைகளை மனதில் வைத்து அமலுக்கு வரும். இந்த முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. அடுத்த 7 நாள்களில் நாடு முழுவதும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். நான் உங்களுக்கு இந்த உத்தரவாதத்தை அளிக்கிறேன்” என்று கூறினார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மத்திய அமைச்சருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
TN CM MK Stalin letter To the Union Minister

புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களில் 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் இன்று (11.07.2024) சிறை பிடித்துச் சென்றனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பயும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 13 மீனவர்களையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது மீனவர்கள் 13 பேருக்கும் ஜூலை 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11-7-2024) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள், IND-TN-08-MM-364, IND-TN-16-MM-2043 மற்றும் IND-TN-08-MM-1478 ஆகிய பதிவெண்கள் கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது இலங்கைக் கடற்படையினரால் இன்று (11-7-2024) கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடித் தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நம் நாட்டு மீனவர்கள். வரலாறு காணாத நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். தற்போது 173 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மீனவர்கள் இதுபோன்று சிறை பிடிக்கப்படுவது மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதோடு, அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட வேண்டும். இதுதொடர்பாக உரிய தூதரக நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

21 முறை ‘ஓம் ஸ்ரீ ராம்’ என எழுதி பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
The Union Minister took charge by writing 'Om Shri Ram' 21 times!

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். 

இந்தத் தேர்தலில் முக்கிய திருப்பமாக அமைந்த 16 எம்.பி.க்கள் கொண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 4 எம்.பிக்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. அதன்படி, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ராம் மோகன் நாயுடுவுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 

இந்த நிலையில், இன்று (13-06-24) எம்.பி ராம் மோகன் நாயுடு மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்பதற்கு முன்னதாக 21 முறை ‘ஓம் ஸ்ரீ ராம்’ என்று எழுதி பொறுப்பேற்றார் என்பது கவனிக்கத்தக்கது.