/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajiv-chandra-ni.jpg)
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமசேரி பகுதியில் நேற்று முன்தினம் (29.10.2023) ஜெகோபா வழிபாட்டுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது காலை 9.40 மணியளவில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தன. கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கொடக்கரா காவல் நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், டொமினிக் மார்ட்டின் டிபன் பாக்ஸில் வெடிகுண்டை மறைத்து எடுத்து வந்து ரிமோட் மூலம் இயக்கி வெடிகுண்டை வெடிக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், நேற்று (30-10-23) குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்பு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஊழல் போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்படும்போது, கேரளா முதல்வர் பினராயி விஜயன் என்னை மதவாதி என்று அழைத்தார். என்னை மதவாதி என்று அழைப்பதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?அவரை விட எனக்கு கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவர்களுடன் நான் நல்லுறவாகத்தான் பழகி வருகிறேன். இப்போது யார் மதவாதி?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மதவாதிகளுக்கு துணை போகிறது. சமீபத்தில் கூட முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அறிவிப்புகளை வெளியிட்டனர். இதன் மூலம் அவர்கள் கேரளாவில் மத பயங்கரவாதத்தை வளர்க்க முயற்சி செய்கின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது டெல்லியில் இருந்து கொண்டு முதல்வர் பினராயி விஜயன் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை என்று தெரிகிறது. உள்துறை பொறுப்பை கையில் வைத்திருக்கும் பினராயி விஜயன் கேரளாவில் அதிகரித்து வரும் பயங்கரவாத செயல்பாடுகளை தடுப்பதில் தோல்வியடைந்து விட்டார்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)