Union minister Nirmala sitharaman crictized mamata banerjee about sandeshkali incident

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

Advertisment

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் ரேஷன் பொருட்கள் ஊழல் தொடர்பாக ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளை ஷாஜகான் ஷேக் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் தப்பிய ஷாஜகான் ஷேக் தலைமறைவாக இருக்கிறார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள், ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப் பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருவதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பெண்களின் இந்த போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையக் குழு சந்தேஷ்காலி கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், சந்தேஷ்காலியில் உள்ள பெண்கள்உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்று கூறப்பட்டது.

இதற்கிடையே, சந்தேஷ்காலி விவகாரத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில், ‘சந்தேஷ்காலி பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஷேக் ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கைதுக்கு இடைக்காலத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே, ஷேக் ஷாஜகான் கட்டாயம் கைது செய்யப்பட வேண்டும்’ என்று கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (27-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சந்தேஷ்காலியை பற்றியும், அங்கு நடைபெற்ற குற்றத்தை பற்றியும் பேசும்போதுஎன் உடல் எல்லாம் நடுங்குகிறது. அவர்கள் இன்னும்அந்த குற்றவாளியை கைது செய்யவில்லை. ஷேக் ஷாஜகான் எங்கு இருக்கிறார் என்பது அவர்களுக்கு தெரியும். அமைச்சர்கள் மட்டும் சந்தேஷ்காலிக்குள் செல்கிறார்கள். மற்றவர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. இது என்ன மாதிரியான சட்டம் ஒழுங்கு” என்று கூறினார்.