Skip to main content

மக்களவை உறுப்பினரின் கேள்வி; அமைச்சருக்கே தெரியாமல் வெளியான பதில் 

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Union Minister Meenakshi Lekhi response was released without approval

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

இதனையடுத்து, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் கடந்த 1ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் இந்தியாவில் ஹமாஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்படுமா என கேரள எம்.பி. சுதாகரன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் கீழ் தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளதாகக் கூறிய ஒரு ஆவணம் லோக் சபா இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்தாகக் கூறப்படுகிறது.

மத்திய இணையமைச்சரின் இந்த பதில் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், மீனாட்சி லேகி, எம்.பி. சுதாகரனின் கேள்விக்கு நான் எந்த விதமான பதிலும் கொடுக்கவில்லை; இது தொடர்பாக நான் எந்த கடித்ததிலும் கையெழுத்திடவில்லை என்று தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் பிரதமர் அலுவலகத்தையும், வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசங்கரையும் டேக் செய்துள்ளார். 

இந்த நிலையில் மத்திய அமைச்சரின் ஒப்புதல் இன்றி எப்படி பதில் வெளியாகியுள்ளது? அப்படி அவர் பதில் அளிக்கவில்லை என்றால் அது லோக் சபா இணையதளத்தில் யார் பதிவேற்றம் செய்தது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்டணி பேச்சுவார்த்தை; மாநில அளவிலான குழுவை அமைத்த பா.ஜ.க

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
BJP has formed a state level committee for Alliance Negotiations

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதே வேளையில், பல்வேறு கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதே சமயத்தில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தமிழக பா.ஜ.கவில் மாநில அளவிலான குழு ஒன்றை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில்,‘மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த மாநில அளவிலான அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

அமெரிக்க ராணுவ வீரருக்காக கலங்கிய ஜி.வி.பிரகாஷ்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
israel palestine issue USA army GV Prakash condolence

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. 

ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட போது, பிணையக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணையக் கைதிகளில் 31 போர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. அதனை அவரே செய்தி சேகரிப்பின் நேரலையில் கூறியது பலரையும் கலங்க வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே  நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் தொடர்பாக அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

கடந்த 25 ஆம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே அமெரிக்காவின் விமானப் படை வீரரான ஆரோன் புஷ்னெல்(25), ‘பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும்..’ என்று முழக்கமிட்டுக்கொண்டே தன்னுடைய உடலில் தீ வைத்துக்கொண்டார். கடைசி வரை தீப்பற்றி எரிந்த நிலையிலும், அந்த இடத்திலிருந்து நகராமல் சரிந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஜி.வி பிரகாஷ், ஆரோன் புஷ்னெல் தற்கொலைக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மனிதம் காக்க தன்னுயிர் ஈந்த மாமனிதனுக்கு என் கண்ணீர் அஞ்சலி. தற்கொலைகள் எந்த சூழலிலும் ஏற்புடையதல்ல” என குறிப்பிட்டுள்ளார். திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டே தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் குறித்து தனது கருத்தை பதிவு செய்வதை வழக்கமாக வைத்து வருகிறார் ஜி.வி பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.