Skip to main content

"கரோனா இரண்டாவது அலை தொடங்கிவிட்டது; எனவே.." - விவசாயிகளுக்கு கோரிக்கை வைத்த மத்திய அமைச்சர்!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

narendra singh tomar

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்திய அவர்கள், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்வரை, வீடு திரும்பப் போவதில்லை என்ற முடிவில் தீவிரமாக உள்ளனர்.

 

இந்தநிலையில் மத்திய வேளாண் துறை அமைச்சர், கரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்றும், பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், பல விவசாய சங்கங்கள், பொருளாதார வல்லுநர்கள் வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். ஆனால் சில விவசாயிகள் இந்த மசோதாக்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன் அரசாங்கம் 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. மேலும், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். பிரச்னைக்குரிய பகுதிகளைப் பற்றி விவாதித்து அவற்றில் மாற்றங்களைச் செய்ய நாங்கள் முன்வந்தோம். விவசாய சங்கங்கள் ஏற்றுக்கொள்ளாததோடு காரணமும் கூறவில்லை. அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லாதபோதோ அல்லது சங்கத்துக்கு சாதகமான பதில் கிடைக்காதபோதோ போராட்டம் தொடரும். இங்கு எப்படியானாலும் போராட்டத்தைத் தொடரவேண்டும் என வேளாண் சங்கங்கள் முடிவெடுத்தன" எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர், கரோனா பரவலை கருத்தில் கொண்டு குழந்தைகளையும், வயதானவர்களையும் வீட்டிற்குச் செல்லுமாறு கூறவேண்டும் என விவசாய சங்கத் தலைவர்களை நான் பலமுறை வலியுறுத்தினேன். இப்போது கரோனாவின் இரண்டாவது அலை தொடங்கிவிட்டது. விவசாயிகளும் அவர்களின் சங்கங்களும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். அவர்கள் போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டு எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்" எனவும் கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகள் போராட்டக் களத்தில்  நிறுத்தப்பட்டுள்ள அதிபயங்கர ஆயுதம்! 

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Sonic sound produce machine in delhi farmers

ஒன்றிய அரசு 2020 ஆம் ஆண்டு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விவசாயிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்திய தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் ஒன்றிய அரசு விவசாயி சங்கங்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால், விவசாயிகள் சட்டத்தை வாபஸ் பெற்றால் மட்டுமே போராட்டம் ஓயும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். அதேபோல், மூன்று வேளாண் சட்டத்திற்கும் எதிராக விவசாயிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், விவசாயிகளின் போராட்டத்தை ஒன்றிய அரசு கையாண்ட விதத்தை கடுமையாக சாடியது. மேலும், மூன்று வேளாண் சட்டங்களுக்கும் உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. 

தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க 2021ம் ஆண்டு குடியரசுத் தினத்தன்று, விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில், விவசாயிகள் செங்ககோட்டையினுள் நுழைந்தனர். மேலும், சிலர் செங்கோட்டையின் மீது விவசாயிகள் சங்கக் கொடியையும் ஏற்றினர். இதில், விவசாயிகளுக்கும் போலீசாருக்குமிடையே மோதல் நடந்து. இதில், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

Sonic sound produce machine in delhi farmers

இந்தப் போராட்டத்திற்கு எதிர்வினையாக 2021ம் ஆண்டு அக். மாதம் 3ம் தேதி லக்கிம்பூரில் விவசாயிகள் மீது மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதிய சம்பவமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலால் எட்டு பேர் உயிரிழந்ததும் இன்றும் மக்கள் மனதில் இருந்து வடியாத வடுவாகவே உள்ளது.  இது தவிர டெல்லியில் கடும் குளிரில் போராடிய விவசாயிகள் பலர் உயிரிழந்தனர். 

இப்படி பல்வேறு போராட்டமும், உயிரிழப்புகளையும் கடந்து 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியா மட்டுமின்றி விவசாயிகளின் இந்தப் போராட்டம் உலகம் முழுக்க கவனம் பெற்றது. 

Sonic sound produce machine in delhi farmers

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது மட்டுமின்றி, குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி மத்திய அரசு, விவசாயிகளுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தில், குறைந்தபட்ச ஆதார விலை குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும், அந்த குழுவில் விவசாயிகளும் இடம்பெறுவார்கள், விவசாயிகள் மீதான வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்படும், பயிர் கழிவுகளை எரித்ததற்கான வழக்குகளும் திரும்பப் பெறப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனையேற்ற விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். 

Sonic sound produce machine in delhi farmers

ஆனால், தற்போதுவரை ஒன்றி பா.ஜ.க. அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் மீண்டும் போராட்டம் தொடரும் என விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் விவசாயிகள் சங்கங்கள் சார்பாக போராட்டம் துவங்கியது. இந்தப் போராட்டத்திற்கு விவசாயிகள் வருவதை தடுப்பதற்கு ராணுவமும் போலீஸும் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தன. குறிப்பாக விவசாயிகள் வரும் சாலைகளில் ஆணிகள் பதிப்பது, வழியில் முள்வேலிகளை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுப்பட்டன. இதனை எல்லாம் தாண்டி விவசாயிகள் போராட்டக் களத்தை நோக்கி நகர்ந்தபோது  போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டது. கலைந்து செல்லாமல் இருந்த விவசாயிகள் மீது தடியடியும் நடத்தப்பட்டுள்ளது. 

இப்படி தொடர்ந்து விவசாயிகளை அடக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்க, அதனை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். இந்நிலையில் போராடும் விவசாயிகளை முடக்க அதிபயங்கரமான ஆயுதம் ஒன்று போராட்டக் களத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. 

Sonic sound produce machine in delhi farmers

அதிப் பயங்கர ஒலி எழுப்பக்கூடிய சோனிக் ஆயுதம் எனப்படும் எல்.ஆர்.ஏ.டி. போராட்டக் களத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மனித செவிமடல் தாங்கும் ஒலி அளவைவிட பன்மடங்கு அதிகமாக இதில் இருந்து ஒலி எழுப்பப்படும். அப்படி அதிக ஒலி எழுப்பப்படும்போது, மனித செவி திறன் பாதிக்கப்படும். இந்த ஒலியை தாங்க முடியாமல் போராடும் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து செல்வார்கள் என திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

Next Story

மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்  ராஜினாமா!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Union Minister Narendra Singh Tomar has resigned!

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இதனையடுத்து, மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.

 

அதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே போல்,  கடந்த 4ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 

 

இந்த தேர்தல்களில் மத்திய அமைச்சராக இருந்த சிலரும், எம்.பி.க்கள் சிலரும் போட்டியிட்டனர். அதில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் உட்பட 10 எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், நரேந்திரசிங் தோமர் மற்றும் பிரகலாத்சிங் பட்டேல் ஆகியோர் மத்திய பிரதேச சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரு மாநிலத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிக்க முடியாத காரணத்தினால், பா.ஜ.க மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

 

அதில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதனையடுத்து, நேற்று (06-12-23) நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மற்றும் பிரகலாத்சிங் பட்டேல் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வந்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். 

 

அதே போல், மத்திய பிரதேச எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகேஷ் சிங், உத்ய பிரதாப் சிங் மற்றும் ரித்தி பதக் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.  அதே போல், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அருண் சாவோ, கோமதி சாய் ஆகிய 2 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யவர்தன் ரத்தோர், தியா குமார், கிரோரி லால் மீனா ஆகிய 3 பேரும் நேற்று (06-12-23) தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.