Skip to main content

மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட ட்விட்டர்...

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

twitter apologise in jammu and kashmir geotag issue

 

 

ட்விட்டர் நேரலையின்போது இந்தியாவின் ஜம்மு காஷ்மீரை சீனாவின் எல்லைக்குட்பட்ட பகுதி என காட்டிய சர்ச்சையில், மத்திய அரசு அமைத்த நாடாளுமன்ற விசாரணை குழுவிடம் அந்நிறுவனம் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது. 

 

ஜம்மு காஷ்மீர் பகுதியிலிருந்து கடந்த மாத மத்தியில் ட்விட்டரில் நேரலை செய்யப்பட்ட ஒரு வீடியோவில் தவறான ஜியோடேக் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் தோன்றிய ட்விட்டர் ஜியோடேக்கின்படி ஜம்மு, காஷ்மீரின் லே பகுதி சீனாவின் பகுதியாகக் காட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரம் இந்தியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை பெற்ற நிலையில், இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் வருத்தம் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற சிறப்பு குழுவை அமைத்தது மத்திய அரசு.

 

இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளிக்க, 'தனிப்பட்ட தரவு பாதுகாப்பு' குறித்த கூட்டு நாடாளுமன்றக் குழுவின் முன், ஆஜரான ட்விட்டர் அதிகாரிகள் வாய்மொழி மன்னிப்பு கோரினர். ஆனால், இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நாடாளுமன்றக் குழு, எழுத்துப்பூர்வ மன்னிப்பு கோரவும், இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த தவறுக்காக  இன்று இந்திய அரசிடம் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது ட்விட்டர் நிறுவனம். நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மன்னிப்புக் கோரப்பட்டுள்ளதுடன், இந்த தவறினை இம்மாத இறுதிக்குள் சரிசெய்து விடுவதாகவும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'ஒரு வாரம் ஆம்லெட் சாப்பிட மாட்டேன்'-தண்டனை கொடுத்துக்கொண்ட எலான் மஸ்க் 

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
nn

'ஸ்பேஸ் எக்ஸ்' என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் உலக முன்னணி பணக்காரர்களில் ஒருவர் ஆவார். தற்போது டிவிட்டர் வலைதளத்தை எக்ஸ்(x) என்ற பெயரில் நடத்தி வருபவரும் அவரே. பல்வேறு விண்வெளி துறை தொடர்பான ஆராய்ச்சிகளையும், ரோபோக்கள் ஆகியவற்றையும் ஸ்பேஸ் நிறுவனம் கண்டுபிடித்து அதை வெளிப்படுத்தி வருகிறது.
 

அந்த வகையில் சமீபத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட் ஒன்று மத்திய சீனாவின் கோங்கி மலை பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது தானாகவே விண்ணில் பாய்ந்தது. சில நொடிகளில் கீழே விழுந்த ராக்கெட் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது. நடைபெற்ற இந்த விபத்து சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கட்டமைப்பு கோளாறு காரணமாக ராக்கெட் வெடித்துச் சிதறியதாகவும், அந்த மலைப்பகுதி மக்கள் யாரும் வசிக்காத பகுதி என்பதால் யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் நியூயார்க்  டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியை அந்நாட்டு ஊடகவியலாளர் மைக் பெஸ்கா என்பவர் தன்னுடைய வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் .

அதில், யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தெரிவித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பதிலளிக்கும் வகையில் ராக்கெட் வெடித்து சிதறியதில் அங்கு இருந்த ஒன்பது பறவை கூடுகள் அழிந்துள்ளது என பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கான பதிலை எலான் மாஸ்க் தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவில், 'இந்த கொடூர குற்றச்சாட்டுக்கு பரிகாரமாக ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன்' எனக் கிண்டலாக பதிலளித்துள்ளார். ஏற்கனவே எலான் மஸ்க் அதிரி புதிரியான தகவல்களையும், நக்கல் நையாண்டித் தனமான பதிவுகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி  வரும் நிலையில் எலான் மஸ்க்கின் இந்த பதிலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.

Next Story

பயங்கரவாத தாக்குதல்; 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Jammu and Kashmir Kathua dt incident 
கோப்புப்படம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில் இந்திய ராணுவ வாகனம் மீது இன்று (08.07.2024) பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நடைபெற்ற பகுதி இந்திய ராணுவத்தின் 9வது படையின் கீழ் வருகிறது. பயங்கரவாதிகளின் இந்த துப்பாக்கிச் சூட்டையடுத்து ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் கதுவாவின் மச்சேடி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 6 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது எனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.