மேற்குவங்க கல்வித்துறை மோசடி வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டுவருகிறது. இதில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில பள்ளி பணிகள் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து மேற்குவங்க உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்துவருகிறது.
இந்த முறைகேடு நடந்தபோது அம்மாநில கல்வித்துறை அமைச்சராக பார்தா சட்டர்ஜி இருந்தார். தற்போது இவர் மாநில தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்துவருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை அமலாக்கத்துறை பார்தா சட்டர்ஜி இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல், அவரது உதவியாளர் அர்பிதா சட்டர்ஜி வீட்டிலும் சோதனை நடத்தினர்.
இதில், அபிர்தா சட்டர்ஜி வீட்டில் ரூ.2000 மற்றும் ரூ. 500 நோட்டுகள் கட்டுக்கட்டாக சிக்கின. சிக்கிய பணத்தின் மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என அமலாக்கத்துறையினர் தோராயமாக தெரிவித்தனர். மேலும், இந்தப் பணத்தை எண்ணுவதற்கு அமலாக்கத்துறை வங்கி அதிகாரிகளின் உதவியை நாடியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அதேபோல், அபிர்தா சட்டர்ஜி வீட்டில் இருந்து 20 செல்போன்களை கைப்பற்றியுள்ளதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை முன்னாள் கல்வித்துறை அமைச்சரான பார்தா சட்டஜியை அமலாக்கத்துறையினர் கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
அமைச்சரின் உதவியாளர் வீட்டில் இவ்வளவு பணம் சிக்கியதும், இன்று காலை அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பதும் அம்மாநில அரசியலிலும், இந்தியா முழுக்கவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.