காவிரியின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாகயுள்ளது. இதற்காக தொடர்ந்து முயற்சிகளையும் எடுத்துவருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, மேகதாது அணைகட்ட மத்திய அரசு, கர்நாடகாவிற்கு அனுமதியளிக்கக் கூடாது என மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தநிலையில் நேற்று கர்நாடக எம்.எல்.ஏவும், தமிழக பாஜக பொறுப்பாளருமான சி.டி ரவியிடம் மேகதாது விவகாரம் குறித்து கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மேகதாது விவகாரம் நடைமுறை சார்ந்து பார்க்கப்படவேண்டும் எனவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பார்க்கக்கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனையை அரசியலாக்குவது சரியல்ல என்றார்.
இந்தநிலையில் சி.டி ரவியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, சி.டி. ரவி கன்னட ஆதரவாளர் அல்ல எனக் கூறியிருப்பதோடு, "மேகதாது அணை கட்டுவது நமது உரிமை. அதை தடுப்பதற்கு தமிழக அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது" எனக் கூறியுள்ளார்.