Skip to main content

டிபன் பாக்ஸ் வெடிகுண்டு; கேரளா சம்பவத்தில் சரணடைந்த நபரின் வாக்குமூலம்

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

Tiffin Box Bomb; Statement of Surrender person  Confession

 

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமச்சேரி பகுதியில் ஜெகோபா வழிபாட்டுக் கூட்டத்தில் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களமச்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் குண்டுவெடிப்பு குறித்து மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கொடக்கரா காவல்நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சரணடைந்த கொச்சியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் கொடுத்த முதல்கட்ட வாக்குமூலத்தில் டிபன் பாக்ஸ் மூலம் மறைத்து வைத்து வெடிகுண்டை கொண்டுவந்து வெடிக்க செய்தது தெரியவந்துள்ளது. மேலும் மார்ட்டின் யெகோவா சாட்சிகள் சபையின் உறுப்பினராகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. எதற்காக குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்பது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாராயம் காய்ச்சி குடித்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Published on 12/07/2024 | Edited on 13/07/2024
People admitted to hospital after drinking liquor

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மழுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன்(65).  அடுப்புக்கரி வியாபாரம் செய்து வரும் இவர் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக சாராயம் காய்ச்சி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் ஏழுமலைக்குத் தெரியவர, உடனடியாக  மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருடன் தேவன் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியுள்ளார்.

சோதனையில்  சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த ஊறல் மற்றும் காய்ச்சி வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தைக் கைப்பற்றினர். மேலும் தேவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது, சாராயத்தைக் காய்ச்சி தன்னிடம் வேலை செய்யும் மணி, பெருமாள், அய்யனார், ராதா கிருஷ்ணன், மதுரை ஆகிய 5 பேருக்கு குடிக்கக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் அதில் 3 பேரை  பிடித்து முழு மருத்துவ பரிசோதனை செய்தனர். மூவருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று  மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கைக்காக அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எஞ்சியுள்ள 2 பேருடன் சேர்த்து 5 பேரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்; கோவையில் பரபரப்பு 

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
teacher misbehaving with schoolgirls

கோவை அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில், 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், பால்ராஜ் என்பவர் நூலக பொறுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அப்பள்ளியில் பயின்று வரும் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நாளாக நாளாக பால்ராஜின் தொந்தரவு அதிகரிக்க, ஆத்திரமடைந்த மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் நூலக பொறுப்பு ஆசிரியர் பால்ராஜை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இந்த நிலையில் இது சம்பந்தமான புகார் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், குழந்தை நல வாரிய அதிகாரிகளுக்கும் சென்றுள்ளது. 

உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, பால்ராஜ் மேலும் இரு மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தை நல அதிகாரிகள் ஆர்.எஸ்.புரம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் பால்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.