/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raill-ni.jpg)
கேரளா மாநிலம், கண்ணூர் அருகே உள்ள பாப்பினிசேரி பகுதியைச் சேர்ந்தவர் பைசல். இவருக்கு சரிபா என்ற பெண்ணுடன் திருமணமாகி 17 வயதில் இரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், இவர்கள் நான்கு பேரும் கோழிக்கோட்டில் இருந்து கண்ணூர் செல்வதற்காக நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். அப்போது அவர்களுக்கு முன்பதிவு டிக்கெட் கிடைக்காத காரணத்தினால் சாதாரண டிக்கெட்டை எடுத்து ரயிலில் ஏறினர்.
அங்கு பொதுப் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சரிபாவையும் தனது மகளையும் முன்பதிவு பெட்டியில் ஏற்றிவிட்டு, பைசல் தனது மகனுடன் பொதுப் பெட்டியில் ஏறினார். அதன்பின், ரயில் மெதுவாக கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படத்தொடங்கியது. அப்போது திடீரென்று, சரிபாவும், அவரது மகளும் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பைசல், உடனடியாகத்தனது மகனுடன் ரயிலை விட்டு கீழே இறங்கினார். மேலும், கீழே விழுந்த மனைவியையும், மகளையும் மீட்டு அவர்களிடம் விசாரித்தார்.
அப்போது, சாதாரண டிக்கெட்டுடன் முன்பதிவு பெட்டியில் ஏறியதால் டிக்கெட் பரிசோதகர் தங்களை கீழே தள்ளிவிட்டார் என்று சரிபா கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பைசல், இந்த சம்பவம் குறித்து கோழிக்கோடு ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மேலும், ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்ததால் சரிபாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவரை அழைத்துக்கொண்டு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பைசல் அனுமதித்தார். இதனையடுத்து, பைசல் அளித்த புகாரின் பேரில் ரயில்வே காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)