/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_432.jpg)
மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர், படேல் நகரில் உள்ள கோவில் ஒன்றில் படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு ஒன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர், படேல் நகரில் உள்ள பலேஸ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவிலில் படிக்கட்டுகளுடன் கூடியகிணறு இடிந்து விழுந்தது. ராமநவமி விழா கொண்டாடப்பட்ட போது கோவிலில் இருந்த கிணற்றை மூடி இருந்த தடுப்புச்சுவர்இடிந்து விழுந்ததில் 30 பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். கோவிலில் இருந்த பிற பக்தர்களும் தகவல் அறிந்து உடனடியாக வந்த மீட்புக்குழுவினரும் துரிதமாகச் செயல்பட்டு இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட பக்தர்களை மீட்டனர். எனினும் 11 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
அளவுக்கு அதிகமான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்ததன் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த சம்பவத்தை அறிந்து மீட்பு பணியை விரைவுபடுத்த உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
“CMO இந்தூர் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. இந்தூர் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். பக்தர்களை வெளியேற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலர் மீட்கப்பட்டுள்ளனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதல்வர், “இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். மீட்பு பணி நடந்து வருகிறது. 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.ஒன்பது பேர் சிக்கியுள்ளனர்.அவர்கள் மீட்கப்படுவார்கள். மற்றவர்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். முதலமைச்சரிடம் இது குறித்து விசாரித்தேன். நிலைமை குறித்த விவரங்களையும் தற்போதைய நிலையையும் விளக்கினார். மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)