Telangana Congress Chief Minister praises PM Modi

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பல்லாயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி நேற்று (04-03-24) ஒருநாள் பயணமாகத் தமிழகம் வந்து கல்பாக்கம் அதிவேக ஈனுலை மின் உற்பத்தியின் தொடக்கப் பணிகளைப் பார்வையிட்டார். மேலும் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையில் கோர் லோடிங் பணியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். அதன்பின்னர், பிரதமர் மோடி அங்கிருந்து சாலை மார்க்கமாக நந்தனம் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெற்ற பாஜகவின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

Advertisment

தமிழகம் வந்த பிரதமர் மோடி, அதன் பின் தெலங்கானா மாநிலத்திற்கு நேற்று (04-03-24) சென்றார். அங்கு, அடிலாபாத்தில் ரூ.56,000 கோடி மதிப்பிலான 30க்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களுக்குஅடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடியை ‘அண்ணா’ என அழைத்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “என்னை பொறுத்தவரை பிரதமர் மோடி எனது மூத்த சகோதரர் போன்றவர். பிரதமரின் உதவியால் மட்டுமே, ஒவ்வொரு மாநில முதல்வர்களும் தங்களது மாநிலங்களை முன்னேற்றி கொண்டு செல்லமுடியும். குஜராத் மாநிலம் போன்று தெலங்கானா முன்னேற வேண்டுமென்றால் பிரதமரின் உதவி தேவை.

காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவ பிரதமர் மோடியின் ஆதரவை கோரியிருப்பதால், மத்திய அரசுடனான மோதலை விரும்பவில்லை. மாறாக சுமுகமான உறவை விரும்புகிறது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற பிரதமரின் கனவை நிறைவேற்ற உதவ விரும்புகிறேன்” என்று கூறினார். காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment