2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்திருந்தது. முன்னதாக பாகிஸ்தானில் சர்வதேச அளவில் நடைபெற்ற பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருந்த போட்டிகள் இலங்கை மற்றும் துபாய் போன்ற நாடுகளில் நடைபெற்றது. அந்த வகையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை மற்றும் துபாயில் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது என்றும் இந்திய அணி விளையாடும் போட்டிகளைத் துபாயில் நடத்த வேண்டும் என்றும் பி.சி.சி.ஐ. சார்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. பி.சி.சி.ஐயின் இந்த முடிவால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், அரசியலை விளையாட்டில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேஜஸ்வி யாதவ், “விளையாட்டில் அரசியல் கூடாது. பாகிஸ்தான் நமது நாட்டிற்கு வர வேண்டும், நமது வீரர்களும் அங்கு செல்ல வேண்டும். விளையாட்டில் என்ன பிரச்சனை? விளையாட்டில் போர் நடப்பது போல் இல்லை. இந்தியா ஏன் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது? பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு பிரியாணி சாப்பிடச் சென்றால் அது நல்ல விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு விளையாடச் சென்றால் அது தவறாக பார்க்கப்படுகிறது. இது மாதிரியாக சிந்திப்பது சரியாக இருக்காது” என்று கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு சென்றது. அதன் பிறகு, 2012-13 இல் இந்தியாவில் இருதரப்பு தொடரில் விளையாடினர். அரசியல் உறவுகளால் , ஐசிசி போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. மேலும், சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு அடுத்த வருடம் பாகிஸ்தானில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.