
டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, ‘டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டேன்’ எனக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால், தான் தாக்கப்பட்டதாக போலீசாரிடம் கூறிய ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால், இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் எந்தவித புகாரும் அளிக்கவில்லை. இருப்பினும், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் மீது கடந்த 16ஆம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இதனையடுத்து, டெல்லி போலீசார் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தாக்கப்பட்டதாக கூறும் ஸ்வாதி மாலிவால், பா.ஜ.க முகமாக இருக்கிறார் என்றும், பா.ஜ.கவின் சதி திட்டத்தின் அடிப்படையில்தான் அவர் பொய் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டுகிறது.
இந்த நிலையில், ஸ்வாதி மாலிவால் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நிர்பயாவுக்கு நீதி கிடைக்க நாம் அனைவரும் வீதியில் இறங்கிய காலம் ஒன்று இருந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று, சி.சி.டி.வி கேமரா காட்சிகளை மறைத்து குற்றவாளியைக் காப்பாற்ற தெருவில் இறங்குகிறார்கள். மனிஷ் சிசோடியாக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இங்கே இருந்திருந்தால், எனக்கு விஷயங்கள் மோசமாக இருந்திருக்காது” என்று பதிவிட்டுள்ளார்.