Skip to main content

வெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

car near ambani house

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான திரு. முகேஷ் அம்பானி, மும்பையின் கம்பல்லா ஹில் பகுதியில் ஆன்டிலியா என அழைக்கப்படும் ஆடம்பரமான இல்லத்தில் வசித்து வருகிறார். 27 மாடிகளோடு 4 லட்சம் சதுர அடியில் பரந்து விரிந்துள்ள அவரது இல்லத்தில், மூன்று ஹெலிபேடுகள், 168 கார்களை நிறுத்துவதற்கான இடம், ஒன்பது அதிவேக லிஃப்ட், 50 இருக்கைகள் கொண்ட தியேட்டர், மொட்டை மாடி தோட்டங்கள், நீச்சல் குளம், ஸ்பா, ஹெல்த் சென்டர், கோயில் உள்ளிட்டவை இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே, சந்தேகத்துக்கு இடமான கார் ஒன்று நின்றுள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அந்தக் காரை சோதனையிட்டனர். அப்போது அந்தக் காரில் 20 கிலோ ஜெலட்டின் குச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காரிலிருந்து கடிதம் ஒன்றும், சில நம்பர் பிளேட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நம்பர் பிளேட்டில் ஒன்று, முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு வாகனத்தின் நம்பர் பிளேட்டோடு ஒத்துப்போவதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், வியாழக்கிழமை (25 பிப்.) இரவு ஒருமணிக்கு இரண்டு கார்கள் அப்பகுதிக்கு வருவதும், ஒருவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே ஒரு காரை நிறுத்திவிட்டு, இன்னொரு காரில் ஏறி செல்வதும் பதிவாகியுள்ளது.

 

இந்த சம்பவம் குறித்து மஹாராஷ்ட்ரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ‘இதுபற்றி மும்பை குற்றப்பிரிவு விசாரித்து வருவதாகவும், உண்மை விரைவில் வெளிவரும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்