Skip to main content

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு; மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

Published on 22/08/2024 | Edited on 22/08/2024
Supreme Court  order; Doctors call off the struggle

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 9ஆம் தேதி (09.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.

இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அந்தவகையில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதனிடையே கொல்கத்தா உயர்நீதிமன்றம் கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த சூழலில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பெண் மருத்துவர் கொலைத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Supreme Court  order; Doctors call off the struggle

இதனையடுத்து உச்ச நீதிமன்றம், “எங்களுக்கும் மருத்துவர்கள் மீது நலனும் அக்கறையும் உள்ளது. எனவே இச்சூழலை அரசியலாக்க வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்யும். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். அமைதியான முறையில் போராடிய மருத்துவர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அனைத்து மருத்துவமனை நிர்வாகத்துக்கும் உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவின்படி பணிக்குத் திரும்பும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து மாநில அரசு தலைமைச் செயலாளர்கள், காவல்துறை டிஜிபிக்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட வேண்டும்.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில்  நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டு பணிக்குத் திரும்புவதாக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்