
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள மகோரா காவல் நிலையத்தில் மோகித் ராணா என்பவர் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அதே காவல் நிலையத்தில் பெண் ஒருவரும் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு இருவரும் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது, மோகித் ராணா அத்துமீறி பெண் காவல் உதவி ஆய்வாளர் அறைக்குள் நுழைந்துள்ளார். அதீத போதையில் இருந்த மோகித் ராணா, பெண் சப் இன்ஸ்பெக்டரை ஆபாசப் படம் பார்க்க கட்டாயப்படுத்தியிருக்கிறார். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க, போதை தலைக்கேறிய மோகித் ராணா பெண் உதவி காவல் ஆய்வாளரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். இதனால் பதறிப்போன பெண் உதவி ஆயவாளர் மோகித் ராணாவை தட்டிவிட்டு உடனடியாக வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை(20.3.2025) சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெண் உதவி ஆய்வாளர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பார் உத்தரவிட்டார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணைக்காக மோகித் ராணாவை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது தன்னுடைய ஸ்மாட் வாட்ச் மற்றும் செல்போனை வெளியே வீசிய மோகித் ராணா அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், மோகித் ராணாவை மடக்கிப் பிடித்த போலீசார், அவர் வீசி எறிந்த செல்போனையும், ஸ்மாட் வாட்சையும் தேடி வருகின்றனர்.
இதனிடையே விசாரணையில், பெண் உதவி ஆய்வாளரிடம் அத்துமீறி நடந்துகொண்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், ரோகித் ராணாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.