Su Venkatesan MP says They are afraid of the present and want to bury the past

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், “கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், வெள்ளை அறிக்கை மீதான விவாதம் இன்று (09-02-24) மக்களவையில் நடைபெற்றது.

வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தின் போது உரையாற்றிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், “சில மனிதர்கள் நிகழ்காலத்திற்கு அஞ்சி கடந்த காலத்திலேயே வாழ்வார்கள். அதுபோல் சில கட்சிகளும்தேர்தல் வந்துவிட்டால் வேலையின்மை, வறுமையை பற்றி நாங்கள் பேசினால், பா.ஜ.க பலஆண்டுகளுக்கு முன்பு நடந்த படையெடுப்பை பற்றி பேசுகிறார்கள்.

Advertisment

நாங்கள் பணவீக்கத்தைப் பற்றிப் பேசினால், நீங்கள் பாபரைப் பற்றிப் பேசுகிறீர்கள். நாங்கள் கார்ப்பரேட்டுகளைப் பற்றிப் பேசினால், நீங்கள் கஜினி முகமதைப் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள், நிகழ்காலத்திற்கு அஞ்சி நாட்டைக் கடந்த காலத்திற்குள் புதைக்க நினைக்கிறீர்கள். கடந்த காலத்தை கழித்துவிட்டால் உங்களிடம் எதிர்காலத்தை சந்திக்கிற எந்தவொரு கருவியும் இல்லை” என்று கூறினார்.