Skip to main content

"திட்டத்தின் பெயர் 'பணமாக்கல்'.. எவ்வளவு பணம் ஆகும் என தெரியாது" - மத்திய அரசை விமர்சிக்கும் சு. வெங்கடேசன் எம்.பி!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

su venkatesan

 

எவ்வளவு வருமானம் வரும் எனத் தெரியாமலேயே, 400 ரயில்வே நிலையங்களை மத்திய அரசு தனியாருக்குக் குத்தகைக்கு விடப்போவதை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தனது கேள்வி மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.

 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய பணமாக்கல் (national monetisation pipeline) திட்டத்தை முறைப்படி ஆரம்பித்துவைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் குறைவாகப் பயன்படுத்தப்படும் அரசு சொத்துகள், குத்தகைக்குவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் ரயில்வே நிலையங்கள் குத்தகைக்கு விடப்பட இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மறுமேம்பாட்டிற்காக 4 ஆண்டுகளில் 400 ரயில்வே நிலையங்கள் ‘தேசிய பணமாக்கல்’ திட்டத்தின் கீழ் குத்தகைக்கு விடப்படும் எனவும், அதனால் அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை தற்போது மதிப்பிடுவது கடினம் என தெரிவித்துள்ளார்.

 

LOK SABHA

 

ரயில்வே அமைச்சரின் இந்தப் பதிலை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு (எண் 1707) பதில் அளித்துள்ள ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், 4 ஆண்டுகளில் 400 ரயில்வே நிலையங்கள் ‘தேசிய பணமாக்கல்’ திட்டத்தின் கீழ் தனியார் வசம் ‘மறு மேம்பாடுக்காக’ ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

இதனால் அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கக் கூடும் என்ற கேள்விக்கு 'மறு மேம்பாடு வாயிலாக எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை இப்போது மதிப்பிட இயலாது’ என்று பதில் அளித்துள்ளார். திட்டத்திற்குப் பெயர் 'பணமாக்கல்’, ஆனால் எவ்வளவு பணம் ஆகும் என தெரியாது என்ற அமைச்சர் பதில் வியப்பாக இருக்கிறது. ஆனால் இத்திட்டத்தால் லாபம் அடையப்போகும் தனியார்கள் நன்கு அறிவார்கள் எவ்வளவு அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் என்று" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சி.பி.எம். வேட்பாளர்கள் அறிவிப்பு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
CPM Announcement of candidates

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. நாளை (16.03.2024) தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி புதுச்சேரியின் ஒரு மக்களவை தொகுதி உட்பட 10  தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், வி.சி.க. 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கொ.ம.தே.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளும் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளன. அதே சமயம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் தி.மு.க. கூட்டணியில்  ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல் தொகுதியில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Next Story

“ரகசிய சாக்கை விட்டு வெளியே வந்திருப்பது பூனை அல்ல; பூதம்” - சு.வெங்கடேசன் எம்.பி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
S.Venkatesan MP commented on the election  electoral bond

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத் ஸ்டேட் வங்கி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் தேதியை நிர்ணயித்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திலும் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி வாங்கிய தொகை ஆகியவை விவரங்களாக தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் பென்டிரைவ் வடிவில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தேர்தல் பத்திரம் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக முதலிடத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 6,060 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1,609 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாயும், பிஆர்எஸ் கட்சி 1,214 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன.

S.Venkatesan MP commented on the election  electoral bond

இந்த நிலையில் இது குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், “ரகசிய சாக்கை விட்டு வெளியே வந்திருப்பது பூனை அல்ல… பூதம்; தேர்தல் பத்திரங்களில் 22 நிறுவனங்கள். ஒவ்வொன்றும் தந்திருப்பது 100 கோடிக்கு மேல். அமலாக்கத் துறையிடம் "சிக்கிய" ஒரு நிறுவனத்திடம் இருந்து 1368 கோடி. கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்றவர்களின் கணக்கு இது” எனக் குறிப்பிட்டுள்ளார்.