பள்ளி தலைமை ஆசிரியரை மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் பகுதியில் தாமோரா அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுரேந்திர குமார் சுக்சேனா (55) என்பவர், இந்த பள்ளியில் ஐந்து வருடங்களாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் தனது அலுவலகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்ட பள்ளி ஊழியர்களும், ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரின் அலுவலகத்திற்கு வந்து பார்த்தனர். அங்கு சுரேந்திர குமார் சுக்சேனா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சுரேந்திர குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், தலைமை ஆசிரியரை கொலை செய்து விட்டு அவருடைய இருசக்கர வாகனத்தில் அந்த மாணவர் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.