Skip to main content

“ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அதிர்ச்சி தருகிறது”-சு.வெங்கடேசன் எம்.பி.!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

State Bank circular's shocking '- S. Venkatesh MP

 

புதிய பணியாளர்கள் சேர்க்கை மற்றும் பதவி உயர்விற்கான மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகளை பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு பெண் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணியாக இருந்தால் அவர் பணியில் சேர தகுதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்றவர்கள் குழந்தை பெற்ற பின் நான்கு மாத கழித்தே பணியில் சேர தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பதவி உயர்வுக்கும் இதே விதி பொருந்தும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் இது பெண்கள் உரிமையை பறிக்கும் செயல் என ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்விதி கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவரப்பட்டு கடும் எதிர்ப்பு காரணமாக திரும்ப பெறப்பட்டது. தற்போது மீண்டும் அவ்விதி  நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்துக்கு எதிரான ஸ்டேட் வங்கியின் இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி எம்.பி. சு.வெங்கடேசன் நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ஸ்டேட் வங்கி 31.12.2021 அன்று பணி நியமனங்கள் குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அதிர்ச்சி தருகிறது. நாடு முழுவதும் ஜனநாயக அமைப்புகளின், மாதர் இயக்களின், தொழிற் சங்கங்களின் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது. ஸ்டேட் வங்கி 2,50,000 ஊழியர்களை கொண்ட அதில் 62,000 மகளிர் ஊழியர்களை கொண்ட பெரிய அரசு வங்கி.

 

வங்கித் துறையில் இவ்வளவு அதிகமாக வேலை வாய்ப்பு தருகிற இன்னோரு வங்கி கிடையாது. ஆனால் இவ்வளவு பெரிய வங்கி பாலின நிகர் நிலைப் பார்வையில் இவ்வளவு சுருங்கி இருப்பது வேதனை அளிக்கிறது. ஸ்டேட் வங்கியின் சுற்றறிக்கை திரும்ப பெறப்பட வேண்டும், கருவுற்ற மகளிருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி களையப்பட வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா அவர்களுக்கும், ஸ்டேட் வங்கி தலைவருக்கும் கடிதங்கள் எழுதியுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தி.மு.க. பரபரப்பு புகார்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
DMK on Minister Nirmala Sitharaman Sensational complaint

பா.ஜ.க. சார்பில் கோவையில் நேற்று (18.03.2024) நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தன.

தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் மோடி கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதே சமயம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பிரதமரின் கோவை வாகனப் பேரணியில் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளது. மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதற்காகவும் நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோயில்களை தி.மு.க. அழிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவதூறு பரப்பி, வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசுகிறார். உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி தி.மு.க.வின் மீது அவதூறுகளைப் பரப்பியதாக நிர்மலா சீதாராமன் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் அளித்துள்ளார்.

DMK on Minister Nirmala Sitharaman Sensational complaint

அந்தப் புகாரில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 16.03.2024 அன்று மாலை 05.30 மணிக்கு யூடியூப் சேனல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அந்த உரை சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது நிர்மலா சீதாராமன் தனது உரையின் போது திராவிட முன்னேற்றக் கழகம் பற்றிய உண்மைகளைத் திரித்து விமர்சித்தார். அதாவது, ‘நமது கோயிலையே அழிக்கக் கூடிய, நமது கோயிலையே சுரண்டித் தின்னக் கூடிய, நமது மதத்தையே அழிப்பேன் என்று சொல்லக்கூடிய கட்சிக்கெல்லாம் ஏன் ஓட்டு போடுறீங்க’ எனப் பேசியுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

எஸ்.பி.ஐ வங்கிக்கு மீண்டும் குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
The Supreme Court again blocked SBI Bank

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தை எதிர்த்து ஏ.டி.ஆர்., காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி (15.02.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் 5 நீதிபதிகளும் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என ஒருமித்த கருத்துகளைத் தீர்ப்பாக வழங்கினர். மேலும் மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும். அதனை மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணையப் பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர். ஆனால் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.

இது தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 11 ஆம் தேதி (11.03.2024) நடைபெற்ற விசாரணையில், மார்ச் 12 ஆம் தேதி மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வெளியிடவும், அதனை மார்ச் 15 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது இணையத்தில் வெளியிடவும் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை, தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி நேற்று கடந்த 12 ஆம் தேதி (12.03.2024) வழங்கியது. இதனையடுத்து தேர்தல் பத்திர விபரங்களை, தனது இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் தேர்தல் பத்திரங்களை நிறுவனங்கள், தனி நபர்கள் வாங்கிய விவரங்கள் தேதி வாரியாக இடம்பெற்றிருந்தன. அதாவது 337 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் விபரங்களும், 426 பக்கங்களில் அதனை பணமாக மாற்றிய கட்சிகளின் விபரங்களும் அடங்கி இருந்தன.

அதில் அதிகபட்சமாக நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக முதலிடத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 6,060 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1,609 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாயும், பிஆர்எஸ் கட்சி 1,214 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக லாட்டரி நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் அதிக நன்கொடை கொடுத்துள்ளது. மொத்தமாக அந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வழங்கியுள்ளது. மெகா இன்ஜினியரிங் மற்றும் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் 966 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளது. 187 தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

The Supreme Court again blocked SBI Bank

அதே சமயம் தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த 15ஆம் தேதிஉச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீலிடப்பட்ட கவரில் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? என எஸ்.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பினர். மேலும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்க சொல்லியிருந்தோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களையும் எஸ்.பி.ஐ. வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். 

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (18-03-24) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள், ‘உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்புப்படி பத்திர எண்களை வெளியிட வேண்டும். தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.யின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. இந்த வழக்கின் தீர்ப்பை செயல்படுத்துவதில் எஸ்.பி.ஐ வங்கியின் அணுகுமுறை சரியில்லை. ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள எண்ணையும் ஏன் எஸ்.பி.ஐ வங்கி இன்னும் தெரிவிக்கவில்லை?. தேர்தல் பத்திரம் சார்ந்த அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். மறைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் எஸ்.பி.ஐ பொதுவெளியில் வெளியிட வேண்டும். ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண்ணை கட்டாயம் வெளியிட வேண்டும். இந்த தேர்தல் பத்திர எண்களை வரும் மார்ச் 21-ஆம் தேதிக்குள் அனைத்தையும் வெளியிட வேண்டும்’ என்று கூறி உத்தரவிட்டனர்.