Skip to main content

கேள்வி கேட்ட மல்லிகார்ஜுன கார்கே: கையெடுத்து கும்பிட்ட சபாநாயகர் 

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

Speaker Jagdeep Dhankar jokingly answered Mallikarjun Kharge's question Parliament

 

“நா அப்படி சொல்லவே இல்ல...” எனக்கூறி கையெடுத்து கும்பிட்ட துணைக் குடியரசுத் தலைவர், போற போக்க பாத்தா என் மேலேயே ACTION எடுப்பிங்க போல என்று நாடாளுமன்றத்தில் பேசியது பிரதமர் மோடி உள்ளிட்ட எம்.பி.க்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளது.

 

2023 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 31 ஆம் தேதியன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து  2023 - 24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில், ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய அரசியலிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்தனர். இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் கடும் அமளியை சந்தித்து வருகிறது.

 

இத்தகைய காரசாரமான சூழலில், கடந்த 8 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அதுமட்டுமின்றி, அதானி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

 

அப்போது, பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த கார்கே, திடீரென துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் பக்கம் திரும்பினார். அவரைப் பார்த்து, “நீங்க ஒரு பெரிய லாயர். எங்கிட்ட சொன்ன விஷயத்த எல்லாருக்கும் சொன்னிங்களா” என மல்லிகார்ஜுன கார்கே கேட்டவுடன், உடனே குறுக்கிட்ட ஜகதீப் தன்கர், “நா உங்ககிட்ட எவ்வளவோ விஷயம் சொல்லியிருக்கேன். அத பத்தி இங்க பேசுறது சரியா இருக்காது” என சிரித்தபடி கூறினார். அதற்கு பதிலளித்த கார்கே, “சரி அத விடுங்க... நா வேற ஒண்ணு சொல்றேன். நீங்க ஆரம்பத்துல லாயரா இருக்கும்போது, பணத்த கையால எண்ணிட்டு இருந்திங்க. ஆனா இப்போ மெஷின்ல எண்ணிக்கிட்டு இருக்கேன். அப்படினு என்கிட்ட சொன்னிங்களே அதாவது ஞாபகம் இருக்கா?” என சிரித்தபடி கேட்டுவிட்டார்.

 

அதற்கு ஜகதீப் தன்கர், “நா அப்படி சொல்லவே இல்ல... என கையெடுத்து கும்பிட்டு, போற போக்க பாத்தா... என் மேலேயே நாடாளுமன்ற கூட்டுக்குழுவ அமைச்சிடுவாங்க போல” என கிண்டலாக கூறினார். இதைக் கேட்ட பிரதமர் மோடியும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'எல்லாம் சமஸ்கிருதமா?'-அமித்ஷாவுக்கு பறந்த கடிதம்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
'Everything is Sanskrit?'- Tamil Nadu Chief Minister's letter to Amit Shah

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அதில், 'மத்திய அரசின் மூன்று சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு (மாநிலங்களுக்கு) அவகாசம் தரப்படவில்லை. இந்த மூன்று சட்டங்களுக்கும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளது.

எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளது. எனவே புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என தமிழக முதல்வர் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வரின் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.  

Next Story

“ரயில் விபத்திற்கு மோடி அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்” - காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Modi govt should take responsibility for the train incident Congress leaders insist

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் இன்று (17.06.2024) காலை 9 மணியளவில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது. இந்த ரயில் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் முழுவதுமாக சீர்குலைந்துள்ளன. அதிலும் குறிப்பாக எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டது. இதனையடுத்து இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டார்ஜிலிங் செல்கிறார். விபத்து நடந்த இடத்தில், டார்ஜிலிங் எம்.பி., ராஜு பிஸ்டா நேரில் பார்வையிட்டார். 

Modi govt should take responsibility for the train incident Congress leaders insist

இந்நிலையில் இந்த ரயில் விபத்து சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அரசு உடனடியாக முழு இழப்பீடு வழங்க வேண்டும். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள ரயில் விபத்துகள் மோடி அரசின் தவறான நிர்வாகத்தின் மற்றும் புறக்கணிப்பின் நேரடி விளைவாகும், இதனால் ஒவ்வொரு நாளும் பயணிகளின் உயிர் மற்றும் உடைமைகளில் இழப்பு ஏற்படுகிறது. பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், இந்தப் பயங்கரமான அலட்சியத்தை நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புவோம். இந்த விபத்துக்களுக்கு மோடி அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Modi govt should take responsibility for the train incident Congress leaders insist

மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். விபத்து காட்சிகள் வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தத் துயர நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே அமைச்சகத்தின் தவறான நிர்வாகத்தில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, மோடி அரசு ரயில்வே அமைச்சகத்தை எப்படி  கேமராவால் இயக்கப்படும் சுயவிளம்பர மேடையாக மாற்றியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது நமது கடமையாகும். மேலும் இந்திய ரயில்வேயைக் கைவிட்டதற்கு மோடி அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வோம்’ எனத் தெரிவித்துள்ளார்.