Sonia Gandhi contest in Rajya Sabha elections

இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சல பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலுங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

Advertisment

அதே சமயம் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15 ஆம் தேதி மற்றும் வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisment

இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 பேரின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது. அதில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி. போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். மனுத்தாக்கலின் போது ராஜஸ்தான் முன்னாள்முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உடன் இருந்தனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசமாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத்தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.