அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அதன் பிறகு, அவரது மகளும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்திக்கு கரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, கரோனா தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இன்று (12/06/2022) டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது; தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.