Sitaram Yechury said One country, one election is unfit for democracy

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

அதே சமயம் ஒரே நாடுஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்தச் சூழலில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி (23.09.2023) ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்வது பற்றியும், இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்தும் இந்த குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்த வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையில் தேர்தல் நடத்துவது குறித்து ஜனவரி 15 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம் எனக் கடந்த 5 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில், டெல்லியில் இன்று (06-02-24) ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக கருத்து கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார். இந்த கூட்டத்துக்குப் பிறகுஅவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டக்குழுவின் பரிந்துரைகள் முற்றிலும் தவறாக இருக்கிறது. இத்திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த முடியும் என்று அக்குழு நினைக்கிறது. அவர்கள் கருதுவது முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதே எங்கள் கருத்து. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி தன்மைக்கும் பொருந்தாதது. ஒரு அரசு பேரவையில் உறுப்பினர்களால் பெரும்பான்மையை இழந்த பிறகும் ஆட்சியில் தொடர்வது முற்றிலும் ஜனநாயகத்தன்மையற்றது” என்று கூறினார்.