கர்நாடகா மாநிலம், தொட்ட சித்தப்பனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்னாத் ரெட்டி (70). இவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இவரது மனைவி பிரேமாவதி (60). இந்த தம்பதிக்கு திரிவேணி (42) என்ற மகளும், கிருஷ்ணா ரெட்டி (40), நரேந்திர ரெட்டி (38) ஆகிய மகன்களும் இருந்தனர். இந்த மூவருக்கும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்தே இவர்களது வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், சில ஆண்டுகளாகவே இந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. ஆனால், அக்கம்பக்கத்தினர் இது குறித்து பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் (28-12-23) நள்ளிரவு நேரத்தில் ஜெகன்னாத் ரெட்டியின் வீட்டுக்குள் இருந்து அதிகமான அளவில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் தொடர்பாக சித்ரதுர்கா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த அந்த தகவலின் பேரின், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜெகன்னாத் ரெட்டி வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு சென்ற போலீசார், ஐந்து மனித எலும்புக் கூடுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த ஐந்து எலும்புக் கூடுகளை மீட்டு அடையாளம் காண, தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 5 வருடமாக பூட்டப்பட்ட வீட்டில் 5 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.