Sharad Pawar says ajit pawar is not our party leader

மகாராஷ்டிராவில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

Advertisment

இந்நிலையில், சரத் பவாரின் மகளும்தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா சுலே நேற்று முன்தினம் (24-08-23) செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசும்போது, “அஜித் பவார் எங்கள் கட்சியின் மூத்த தலைவர் தான். அவர் மாறுபட்டமுடிவை எடுத்திருக்கிறார். அது குறித்து சபாநாயகரிடம் புகார் செய்திருக்கிறோம். அவரின் பதிலுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

Advertisment

அதனைத்தொடர்ந்து, சரத் பவார் மகாராஷ்டிரா பூனே மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பாராமதியில்நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது சுப்ரியா சுலே கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “அஜித் பவார் எங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படவில்லை. ஒரு கட்சியில் உள்ள பெரிய குழு தேசிய அளவில் பிரிந்தால் பிளவு ஏற்பட்டது என்று அர்த்தம். ஆனால், இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் வேறு நிலைப்பாட்டை எடுத்து கட்சியில் இருந்து பிரிந்து செல்கின்றனர். அவர்கள் தங்கள் முடிவை எடுப்பது என்பது ஜனநாயக முறைப்படி அவர்களது உரிமை ஆகும்” என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சில மணி நேரத்தில் சரத் பவார் நேற்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அஜித் பவார் எங்கள் கட்சித் தலைவர் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. சுப்ரியா சுலே தான் சகோதரர் என்ற முறையில் அப்படி கூறினார். அவர் கூறியதாக செய்தி தாள்களிலும் வந்திருக்கின்றன. இதை இப்போது நான் கூறியதாக எடுத்துக் கொண்டது உங்கள் தவறு. அஜித் பவார் எங்கள் கட்சித் தலைவர் இல்லை. இது தான் எங்களுடைய நிலைப்பாடு” என்று கூறினார்.