எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திமுக, விசிக, உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளோடு காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்ப்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தார். தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடும், கம்ப்யூனிஸ்ட் கட்சியோடும் கூட்டணி சேராமல், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டார். இதனால், இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியை தலைமை தாங்க நான் தயாராக இருக்கிறேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது, “நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன். இப்போது அதை முன்னின்று வழிநடத்துபவர்கள்தான் நிர்வகிக்க வேண்டும். அவர்களால் நிகழ்ச்சியை நடத்த முடியாவிட்டால், நான் என்ன செய்ய முடியும்? அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் கூறுவேன். வாய்ப்பு கிடைத்தால் அதன் சீரான செயல்பாட்டை உறுதி செய்வேன். நான் மேற்கு வங்கத்திற்கு வெளியே செல்ல விரும்பவில்லை, ஆனால் நான் இந்தியா கூட்டணியை இங்கிருந்து இயக்க முடியும்” என்று பேசினார்.
மம்தா பானர்ஜியின் இந்த பேச்சு, இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூட்டணி கட்சிகள் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. தனுஜ் புனியா, “இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் தேசியத் தலைவருடன் விவாதிக்க வேண்டும். இது ஊடகங்களில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. மம்தா பானர்ஜிக்கு பரிந்துரைகள் இருந்தால், அவை அனைத்து கூட்டணி கட்சிகளின் விவாதத்திற்கு முன்வைக்கப்பட வேண்டும், அதன்படி முடிவுகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.
மம்தா பானர்ஜியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் உதவீர் சிங், “அவர் ஒரு மூத்த தலைவர், அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது. அவர் திறமையானவர். அவருடன் எங்கள் கட்சியின் உறவு நன்றாக உள்ளது. மேலும், அவரது தலைமை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. என்ன செய்ய வேண்டும் என்பதை இந்திய கூட்டணி தலைவர்கள் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதற்கு ஆதரவு அளிப்போம்” என்று தெரிவித்தார்.