Skip to main content

பெகாசஸ் விவகாரம்: அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

supreme court

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஃப்ரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன. இந்திய உச்ச நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

 

இந்தச் சூழலில், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க வல்லுநர் குழுவை அமைக்க தயார் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, சட்டவிரோதமாக எந்த ஒட்டுக்கேட்பும் நடைபெறவில்லை என கூறியதோடு, தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் மத்திய அரசு பெகாசஸைப் பயன்படுத்தியதா என்பது குறித்து பிரமாணப் பத்திரத்தில் கூற முடியாது எனவும், இந்த விவகாரம் குறித்து அரசுடன் தொடர்பற்ற வல்லுநர்களின் குழுவை அமைக்க அனுமதித்தால் அந்தக் குழுவின் முன்னர் பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என தெரிவிக்க தயார் எனவும் கூறியது.

 

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்தது. இந்தநிலையில், உச்ச நீதிமன்றம் இன்று (27.10.2021) பெகாசஸ் விவகாரத்தில் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வாசித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

 

"மனுதாரர்களில் சிலர் பெகாசஸால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். அத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து  தீவிரமாக பரிசீலிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். நாம் தகவல் சகாப்தத்தில் வாழ்கிறோம். தொழில்நுட்பம் முக்கியமானது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். தனியுரிமையைப் பாதுகாப்பது முக்கியம், பத்திரிகையாளர்கள் போன்றவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து குடிமக்களுக்கும் தனியுரிமை முக்கியம். இன்றைய உலகில், தனியுரிமை மீது  கட்டுப்பாடு விதிக்கப்படுவது பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மட்டுமே ஆகும். மேலும், இந்தக் கட்டுப்பாடுகளைத் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க மட்டுமே விதிக்க வேண்டும்.

 

2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பெகாசஸ் தாக்குதல் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட மத்திய அரசுக்குப் போதுமான அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியது. இருப்பினும் வரையறுக்கப்பட்ட பிரமாணப் பத்திரம் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அதில் எந்த தகவலும் இல்லை. மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்தியிருந்தால் நம் மீதான சுமை குறைந்திருக்கும். மத்திய அரசு குறிப்பாக எதையும் மறுக்கவில்லை. எனவே மனுதாரர் சமர்ப்பித்தவற்றை முதன்மையாக ஏற்றுக்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் ஒரு வல்லுநர் குழுவை நாங்கள் நியமிக்கிறோம். இந்தியர்களைக் கண்காணிப்பதில் வெளிநாட்டு முகமைகளின் பங்கு உள்ளதா என்ற தீவிரமான கவலை உள்ளது." இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 

பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவிற்கு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், ரா உளவுப்பிரிவின் முன்னாள் தலைவருமான அலோக் ஜோஷி, தகவல் தொழில்நுட்ப வல்லுனரான சுந்தீப் ஓபராய், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக டீன் நவீன் குமார் சவுத்ரி, பேராசிரியர் பிரபாகரன், இந்திய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் அஷ்வின் அனில் குமாஸ்தே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

வல்லுநர் குழுவை அமைத்துள்ள உச்ச நீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய 8 வாரங்கள் அவகாசமளித்து, வழக்கு விசாரணை 8 வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர். பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க வல்லுநர் குழு அமைக்க மத்திய அரசு அனுமதி கோரியிருந்த நிலையில், அதனை ஏற்க மறுத்து விசாரணை நடத்த தாங்களாகவே ஒரு குழுவினை அமைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'என்னாது எண்ணி முடிக்க இவ்வளவு நாள் ஆகுமா?' -நீதிமன்றம் சொன்ன பதில்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதி வருடத்திற்கு கொண்டு வந்த பொழுது, அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்படுகிறது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.

nn

இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், 'இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 என்ற தொகுதிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது' என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

Next Story

உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராம்தேவ்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Ramdev apologized publicly to the Supreme Court!

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (16.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.