சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகள் 235 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில், மகாயுதி கூட்டணியில் உள்ள பா.ஜ.க 132 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 53 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அதே போல், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், சரத் பவாரின் சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும், சமாஜ்வாதி 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியால் 10 நாட்களாக கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் வந்த நிலையில் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி, மகாராஷ்டிராவின் மூன்றாவது முறையாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக கடந்த 5ஆம் தேதி பதவியேற்றார்.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (06-12-24) பாபர் மசூதி இடிப்பு 32வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தையொட்டி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த தலைவர் மிலிந்த் நர்வேகர், செய்தி தாள் விளம்பரத்தை கொடுத்து அந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவிட்ட அந்த புகைப்படத்தில், ‘இதை செய்தவர்களுக்காக நான் பெருமைப்படுகிறேன்’ என்று எழுதப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தில் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த சர்ச்சை பதிவை தொடர்ந்து, மகா விகாஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிரா பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிரா மாநிலத் தலைவர் அபு அசிம் ஆஸ்மி ஆகியோர் தெரிவித்துள்ளதாவது, “பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நாளிதழில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா விளம்பரம் செய்தது. உத்தவ் தாக்கரேவின் உதவியாளரும் மசூதி இடிக்கப்பட்டதை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகா விகாஸ் கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம். நான் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் சிங் யாதவிடம் பேசுகிறேன். மகா விகாஸ் கூட்டணியில் யாராவது இப்படிப் பேசினால், பாஜகவுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? நாம் ஏன் அவர்களுடன் இருக்க வேண்டும்?
சமாஜ்வாதி கட்சி ஒருபோதும் வகுப்புவாத சித்தாந்தத்துடன் இருக்க முடியாது. எனவே நாங்கள் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து நாங்கள் விலகுகிறோம். மகாராஷ்டிராவில் சமாஜ்வாதி கட்சி தனித்து செல்வது தான் சரி. ஆனால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து கொண்டே உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவின் வகுப்புவாத சித்தாந்தத்தின் ஒரு பகுதியாக மாறுவது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார்.