
முகலாய மன்னரான அவுரங்கசீப் கல்லறை பிரச்சனை மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் வெடித்துள்ளது. சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள இவரது கல்லறையை இடிக்க வேண்டும் என்று அங்குள்ள இந்து அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் எம்.எல்.ஏ அபு அஸ்மி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது, முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு நல்ல நிர்வாகி எனப் பேசியிருந்தார். அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவுரங்கசீப் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எம்.எல்.ஏ அபு அஸ்மியின் இந்த பேச்சு, மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது கருத்துக்கு மாநில துணை தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதற்கொண்டு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக, அபு அஸ்மி மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. அதன்படி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடந்து வரும் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவுரங்கசீப் குறித்து அபு அஸ்மி புகழ்ந்து பேசிய இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று பா.ஜ.க முன்னாள் எம்.பி நவ்நீத் ராணா, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தார். அவரை தொடர்ந்து, பலரும் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.
அதனை தொடர்ந்து, அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கைகளுக்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு தெரிவித்து பேசியிருந்தார். அவுரங்கசீப் கல்லறை தொல்லியல் ஆய்வுத்துறை பாதுகாப்பின் கீழ் உள்ளதால், அதை சட்டத்திற்கு உட்பட்டு தான் அகற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சம்பாஜிநகரில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகளான பஜ்ரங் தால் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் சேர்ந்து நேற்று (17-03-25) போராட்டத்தில் ஈடுபட்டனர். நாக்பூர் அருகே நேற்று காலை இந்து அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வேறு குழுவினருக்கும், இந்து அமைப்புகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. மாறி மாறி கற்களை வீசிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் கார், பைக், கடைகள் உள்ளிட்டவற்றுக்கு தீ வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் பலரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டு வீசியும் தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். இந்த கலவரத்தில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கலவரத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கலவர சம்பவத்திற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பா.ஜ.கவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.