/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pondi-manivannan-mrdr.jpg)
புதுச்சேரி காமராஜர் நகரைச் சேர்ந்த மணிவண்ணன் (53) என்பவர் கோரிமேடு அருகே தமிழ்நாடு பகுதியான திருநகரில் வாட்டர் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றிவந்தார். நேற்று (14.10.2021) ஆயுத பூஜையை ஒட்டி இரவு 7 மணி அளவில் வாட்டர் டேங்க்கிற்கு பூஜை செய்ய சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மணிவண்ணனை வழிமறித்தது. அதிர்ச்சியடைந்த அவர் ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்தக் கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயமடைந்த மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அதன்பின் அக்கும்பல் தப்பித்துச் சென்றது. தகவலறிந்த ஆரோவில் போலீசார் விரைந்து வந்து மணிவண்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், காவல்துறை விசாரணை நடத்தியதில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி புதுச்சேரி மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், காமராஜர் நகர் வார்டு முன்னாள் கவுன்சிலருமான மாந்தோப்பு சுந்தர் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட மணிவண்ணனின் மகன்கள் வினோத், சுந்தர் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதனால் இருவரையும் பழிக்குப்பழியாக கொலை செய்ய எதிரிகள் நோட்டமிட்டுவந்தனர்.
இதை அறிந்த இருவரும் தலைமறைவாகினர். கடந்த 30ஆம் தேதி மாந்தோப்பு சுந்தரின் நினைவுநாளில் அவரது ஆட்கள் மணிவண்ணனின் மகன்கள் இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இந்த நிலையில் சுந்தர், வினோத் இருவரும் ஊருக்குள் நுழைய போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்ததால் அவர்களது திட்டம் தோல்வியில் முடிந்தது. அதையடுத்து அவர்களின் தந்தை மணிவண்ணனை வெட்டிக் கொலை செய்துள்ளனர் என தெரியவந்தது. மணிவண்ணன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர். அவர்களை புதுச்சேரி - தமிழ்நாடு போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். மேலும், கொலையாளிகளைப் பிடிப்பது சம்பந்தமாக இரு மாநில போலீசாரும் வியூகம் வகுத்துவருகின்றனர். இந்தப் பழிக்குப் பழி கொலை சம்பவத்தால் இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)