கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவும், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன. ஆளுநர் இன்னும் முடிவுகளை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது. அப்போது, பாஜகவிடம் இருந்து தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை பாதுகாக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி முயற்சிக்கும். தமிழகத்தில் கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்களை பதுக்கி பாதுகாத்து வைத்தது போல், காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்களை பாதுகாக்க தங்கள் மாநிலத்தில் உள்ள ரிசார்ட்களில் தங்க வைக்க கேரள சுற்றுலா துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து கேரள அரசின் சுற்றுலா துறை தனது ட்விட்டரில் பதிவில் கூறியதாவது,
கர்நாடக தேர்தல் முடிவுகள் சிக்கலாக முடிந்துள்ளதால், அனைத்து எம்.எல்.ஏக்களையும் கடவுளின் தேசத்திற்கு அழைக்கின்றோம். இங்குள்ள ரிசார்ட்கள் மிகவும் அழகானவை, பாதுகாப்பானவை என அந்த பதிவில் கேரள சுற்றுலா துறை குறிப்பிட்டுள்ளது.