Skip to main content

மரணதண்டனை: “உச்சநீதிமன்றத்தின் பார்வை சரி.. இது தீர்வல்ல” - ராமதாஸ்

 

Ramadoss statement about supreme court's comment

 

மரணதண்டனையை தூக்குத்தண்டனையாக நிறைவேற்றாமல் வேறுவழிகளில் நிறைவேற்றலாம் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட், “மரணதண்டனையை குறைந்த வலியுடன் நிறைவேற்றுவதற்கான மாற்றுவழிகள் உள்ளனவா என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், குறைந்த வலியுடன் அல்ல மரணதண்டனையே இருக்கக் கூடாது; அதை ஒழிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தூக்குத்தண்டனை கொடியதாக இருப்பதால், அதைவிட வலிகுறைந்த, கண்ணியமான முறையில் சாவுத்தண்டனையை நிறைவேற்ற முடியுமா? என்பதை ஆராய குழு அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் பார்வை சரியானதாக இருக்கலாம்; ஆனால், அது தீர்வல்ல. சாவுத்தண்டனையே மனிதநேயம் அற்றது எனும் போது, அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளில் மனிதநேயமும், கண்ணியமும் எங்கிருந்து வரும்? சாவுத்தண்டனையே காட்டுமிராண்டித்தனம் என்பதால் அதற்கு ஒட்டுமொத்தமாக முடிவுகட்டுவது தான் தீர்வாக இருக்க முடியும்.

 

குற்றம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையின் நோக்கம் அவர்களைத் திருத்துவது தான். அதற்கு சிறை தண்டனையே சரியானதாக இருக்கும். குற்றமிழைத்த மனிதர்களுக்கு திருந்தி வாழ வாய்ப்பு அளிக்காமல், அவர்களின் வாழ்க்கையையே முடிப்பது இயற்கை நீதியாக இருக்காது. உலகில் 111 நாடுகளில் சாவுத்தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. 24 நாடுகளில் அது நடைமுறையில் இல்லை. உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த இந்தியா சாவுத்தண்டனை ஒழிப்பில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும். இனியாவது சாவுத்தண்டனையை ஒழிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். 

 


 

இதை படிக்காம போயிடாதீங்க !