ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 50 நகராட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 50 நகராட்சிகளில் உள்ள 1775 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி 619 வார்டுகளில் வென்று நகராட்சி தேர்தலில் முதலிடம் பிடித்துள்ளது.
சுயேச்சை வேட்பாளர்கள், 595 வார்டுகளை வென்று இரண்டாம் இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி, 549 வார்டுகளில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் 7 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 வார்டுகளையும் வென்றுள்ளன.
நகராட்சி தேர்தல் வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங், காங்கிரஸ் 41 நகராட்சிகளையும், பாஜக 9 நகராட்சிகளைக் கைப்பற்றும் எனவும், தாங்கள் 17 நகராட்சிகளைத் தனியாகவும், 24 நகராட்சிகளை சுயேச்சைகளோடு சேர்ந்து கைப்பற்றுவோம் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர், வெற்றிபெற்ற சுயேச்சைகளில் பெரும்பாலானோர் தங்களால் நிற்கவைக்கப்பட்டவர்கள் எனவும், தேர்தல் வியூகமாக இதனைச் செய்ததாகவும் கூறியுள்ளார்.